Last Updated : 14 Jun, 2018 08:22 PM

 

Published : 14 Jun 2018 08:22 PM
Last Updated : 14 Jun 2018 08:22 PM

‘காஷ்மீர் குறித்த ஐநாவின் அறிக்கையைக் குப்பையில் வீசுங்கள்’: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையைக் குப்பைத்தொட்டியில் வீச வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாகப் பேசியுள்ளார்.

ஐநா மனித உரிமை அமைப்பு காஷ்மீர் தொடர்பாக முதல்முறையாக 49 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் ஸெய்த் ராத் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2016க்குப் பிறகு நடந்த அப்பாவி மக்கள் படுகொலைகள் மீது விசாரணை தேவை. காஷ்மீரில் பெலட் துப்பாக்கிகள் மூலம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது.

அப்பாவி மக்கள் மீது அளவுக்கதிகமாக வலுவை இந்தியா பயன்படுத்தியுள்ளது என்று சாடியுள்ளார். மேலும் காஷ்மீர் நிலரவம். அங்கு நடைபெறும் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் குறித்து ஒட்டுமொத்த பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை குறித்து பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி நிருபர்களிடம் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையைக் குப்பைத்தொட்டியில் நான் வீசி எறியப்போகிறேன்.

ஒரு சார்பான அறிக்கையை அளிக்கும் இடதுசாரி சார்ந்த அமைப்பு. இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களை நரகத்தில் தள்ள வேண்டும் என்றுதான் நான் கூற வேண்டும். காஷ்மீர் விவகாரம் பற்றி தெரியாதவர்கள் தயாரித்த அறிக்கை என்பதால், அவர்கள் குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கிடையை ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையை மத்திய அரசு கடுமையாக விமர்சித்து, கண்டித்துள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், 1994-ம் ஆண்டு தீர்மானத்தோடு இந்த விஷயம் முடிந்துவிட்டது. அனைத்துக் கட்சிகளும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. ஜம்முகாஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரை இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏதாவது நிலுவையில் ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அது ஆக்கிரமிப்பு பாகிஸ்தானை இந்தியா மீட்பதுதான் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் இறையாண்மையையும், எல்லைப்புற நேர்மையையும் மீறும் செயலாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் இந்தியாவின் ஒரு அங்கமாகும். சட்டவிரோதமாக காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதைத்தான் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய எல்லைப்பகுதி குறித்து தவறாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை என்பது, ஏற்கமுடியாத, தவறாக வழிநடத்தக்கூடிய, தீங்கான அறிக்கையாகும். ஆசாத் ஜம்மு காஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான் எந்தவிதமான உரிமை கோரலும் இல்லை. இந்த அறிக்கையில் பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாதம் குறித்து குறிப்பிடவே இல்லை.

தீவிரவாதிகள் என்றும், ஆயுதம் ஏந்திய வன்முறை குழுக்கள் எனவும் ஐநாவால் குறிப்பிடப்பட்டவர்களை இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் தலைவர்கள் போல் சித்தரிக்கிறார்கள். தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்ற ஐநாவின் நிலைப்பாட்டை இது குறைத்துமதிப்பிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x