Last Updated : 14 Jun, 2018 05:12 PM

 

Published : 14 Jun 2018 05:12 PM
Last Updated : 14 Jun 2018 05:12 PM

‘வன்முறைக்கு ஒரே பதில் வளர்ச்சி மட்டுமே’: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வன்முறைக்கும், எந்தவகையிலான சதித்திட்டங்களுக்கும் சரியான பதிலடி வளர்ச்சியும், மேம்பாட்டுத்திட்டங்களும்தான்.. வளர்ச்சித்திட்டங்கள் எந்தவகையான வன்முறையையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறது. இதற்கு முன்பு இருந்த அரசுகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு அச்சப்பட்டு வளர்ச்சிப்பணிகளை புறக்கணித்த நிலையில், பாஜக துணிச்சலோடு வளர்ச்சி திட்டங்களைச் செய்கிறது.

வன்முறைக்கும், எந்தவகையிலான சதித்திட்டங்களுக்கும் சரியான பதிலடியாக வளர்ச்சியும், மேம்பாட்டுத்திட்டங்களும் என்றுதான் நினைக்கிறேன். வளர்ச்சித்திட்டங்கள் எந்தவகையான வன்முறையையும் முடிவுக்குக் கொண்டுவரும்.

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறோம். மாநிலத்தில் உள்ள இயற்கை வளங்களை விற்பனை செய்து, இந்த மண்ணின் மைந்தர்களின் வளர்ச்சிக்குச் செலவு செய்கிறோம்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும், சத்தீஸ்கர் மாநிலம் கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி நிதிஉதவி பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், கழிப்பறைகள் அமைக்க வழங்கப்பட்டுள்ளன. இங்கு வாழும் பழங்குடிமக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் வருமானத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

என்னுடைய கனவு என்பது, அனைத்து மக்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதாகும். இதற்காகவே உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தி, சிறுநகரங்களை, மற்ற நகரங்களுக்கு இணைத்துள்ளோம்.

எங்களுடைய அரசு ஆட்சிக்கு வந்தபின், சாலை வசதிகளையும், விமானநிலையங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், முந்தைய அரசுகள் சாலைகள் கூட அமைக்கவில்லை. சத்தீஸ்கரை புறக்கணித்துவிட்டன.

இதற்கு முன் ராய்ப்பூரில் நாள் ஒன்றுக்கு 6 விமானங்கள் மட்டுமே வந்தன. ஆனால், இப்போது, 50 விமானங்கள் வரை வந்து செல்கின்றன.

சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் இங்கு ஐஐடி கல்வி நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதன்படி, நாங்கள் பிலாய் நகரில் ஐஐடி கல்வி நிலையத்தை அமைத்திருக்கிறோம். சத்தீஸ்கர் என்றாலே வனப்பகுதி, பழங்குடி மக்கள் என்ற நிலையை மாற்றி, ஸ்மார்ட் சிட்டிக்கும் பெயரெடுத்த நகரங்களாக மாற்றிவிட்டோம். நாட்டின் முதல் கிரீன் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கி இருக்கிறோம்.

பஸ்தர் பகுதி என்றாலே குண்டுகளும், துப்பாக்கிகளும் நிறைந்த பகுதி என்ற நிலைமாறி, விமான சேவைக்கு வழிவகுத்து இருக்கிறோம். சத்தீஸ்கர் மாநிலம் எனக்குப் புதிதானது அல்ல, மத்தியப்பிரதேசத்தோடு இணைந்திருந்தபோது, நாங்கள் இரு சக்கரவாகனத்தில் இங்கு வந்திருக்கிறேன். அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x