Last Updated : 14 Jun, 2018 04:30 PM

 

Published : 14 Jun 2018 04:30 PM
Last Updated : 14 Jun 2018 04:30 PM

ராஜஸ்தானில் காணாமல் போன பிரான்ஸ் பெண்: 13 நாட்களாக தேடுதல் வேட்டை

ராஜஸ்தான் மாநிலத்தின் புனிதத் தலமான புஷ்கருக்கு வந்துவிட்டு ஜெய்ப்பூரைச் சுற்றிப்பார்க்க சென்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போய்விட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து புஷ்கர் காவல்நிலைய அதிகாரி மஹாவீ ர் ஷர்மா தெரிவித்ததாவது:

காணாமல் போன பிரான்ஸ் பெண்ணின் பெயர் கால்லே சவுடியூ. இவர் கடந்த மே 30 அன்று அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகருக்கு வந்துள்ளார். கடந்த ஜூன் 1 அன்று அவர் புஷ்கரில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள பேருந்துநிலையத்திற்கு வந்தார். ஆனால் அதன் பிறகு எந்த பேருந்து ஏறினார் எந்தப் பக்கம் போனார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

ஜெய்ப்பூரைச் சுற்றிப் பார்க்க புஷ்கர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டவர் காணாமல் போனது பற்றி பிரான்ஸ் தூதரகத்தின் ஓர் உயரதிகாரிக்கு செவ்வாய் அன்று மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டது. அவர் தங்கியிருந்த புஷ்கரில் உள்ள தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அப்பெண் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்வதை மட்டும் காணமுடிந்தது. அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது புலப்படவிடல்லை.

அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களுக்கு மூன்று போலீஸ் குழுக்கள் அனுப்பட்டுள்ளன. இங்கிருந்துதான் அவர் புஷ்கருக்கு வந்து சேர்ந்தார்.

புஷ்கரிலிருந்து அவர் மீண்டும் ஜெய்ப்பூருக்கு சென்றிருக்கக் கூடும். அதனால் எங்கள் போலீஸ் குழுக்களை அஜ்மீர், புஷ்கர் மற்றும் ஜெய்பூருக்கு அனுப்பியுள்ளோம். அப்பெண்ணைப் பற்றி உரிய தகவல்களை பெறுவதற்காக அஜ்மீரிலும் புஷ்கரிலும் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பெற்று அதை பரிசோதிக்கும்படி கூறியுள்ளோம்.

அவரது செல்போன் அணைக்கப்பட்டுள்ளது. அதனால் இன்னொரு பக்கம் தொழில்நுட்ப ரீதியான புலனாய்வும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரே சீக்லெர் காணாமல் போன பெண்ணின் படத்தை நேற்று தனது ட்வீட்டரில் வெளியிட்டு அவரைப் பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

அப்பெண்ணின் இடத்தைக் கண்டறிய உதவும்படி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக அப்பெண்ணின் நண்பர்களுக்கும் தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு புஷ்கர் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x