Last Updated : 14 Jun, 2018 03:02 PM

 

Published : 14 Jun 2018 03:02 PM
Last Updated : 14 Jun 2018 03:02 PM

டெல்லி அரசும், மக்களும் கைகட்டிக் கேட்கிறோம்’: பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம்

டெல்லி அரசும், மக்களும் கை கட்டி கேட்கிறோம், உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின்பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, கடந்த 3 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் தலையிட வேண்டும் எனக் கோரி மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 3 மாதங்களாக அமைச்சர்களுடன் எந்தவிதமான திட்டமிடும் கூட்டங்களிலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்பதில்லை. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, கழிவுநீரோடைகள் சுத்தம் செய்வது குறித்து ஆலோசித்து அதிகாரிகளுடன் திட்டமிடலில் ஈடுபட வேண்டும்.

தொற்றுநோய்கள், மழையால் வரும் திடீர் காய்ச்சல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் மக்களுக்காக ஏற்பாடு செய்ய வேண்டும்.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்றுமாசை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது, காற்றுமாசு அபாயகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

டெல்லியின் துணை நிலை ஆளுநரும், பிரதமரும்தான் ஐஏஎஸ் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தை முடித்துவைக்க இதுவரை துணைநிலை ஆளுநர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லி அரசும், டெல்லி மக்களும் கைகட்டி உங்களிடம்(மோடியிடம்) கேட்கிறோம். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பேசி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக முடித்துவைத்து, டெல்லியில் மக்களுக்கான பணிகள் நடக்க உதவுங்கள்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், புனேயில் இருந்து இன்று காலை எனது சகோதரர் என்னைச் சந்திக்க ஆளுநர் அலுவலகத்துக்கு வந்தார். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்கவும், என்னைச் சந்திக்கவும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இது தவறானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக உண்ணாவிரதத்திலும், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுவரும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை மருத்துவர் குழு இன்று காலையில் பரிசோதனை செய்தனர். கேஜ்ரிவாலோடு தங்கி இருக்கும் துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோரின் உடல் நலத்தையும் மருத்துவர்கள் குழு பரிசோதை செய்தனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேறாத வரை துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து நகரப்போவதில்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினையில் மோடி தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், பிரதமர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x