Published : 14 Jun 2018 08:59 AM
Last Updated : 14 Jun 2018 08:59 AM

26 ஆண்டுக்கு முன்பு தனது உயிரை காப்பாற்றிய முஸ்லிம் குடும்பத்தினரை சந்தித்த சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பிறந்தவர் விகாஸ் கண்ணா. சமையல் கலைஞரான இவர் மும்பையில் பல ஓட்டல்களில் பணிபுரிந்துள்ளார். இப்போது நியூயார்க் நகரில் வசிக்கிறார்.

இந்நிலையில், விகாஸ் கண்ணா ட்விட்டரில் “26 ஆண்டுக்கு முன்பு எனது உயிரைக் காப்பாற்றிய முஸ்லிம் குடும்பத்தினரை கண்டுபிடித்துவிட்டேன், அவர்களுடன் இணைந்து ரம்ஜான் நோன்பை முடிக்க உள்ளேன்” என கடந்த 11-ம் தேதி பதிவிட்டிருந்தார். இதன்படி, நேற்று முன்தினம் இரவு அந்த முஸ்லிம் குடும்பத்தினரை சந்தித்த விகாஸ், அவர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு விகாஸ் முகநூலில் வெளியிட்ட பதிவில், “1992-ம் ஆண்டு மும்பை சீராக் ஷெரட்டான் ஓட்டலில் பணியாற்றினேன். அப்போது டிசம்பர் மாதம் பெரும் கலவரம் வெடித்தது. மாநகரமே பற்றி எரிந்ததால் ஓட்டலை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை” என கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கட்கோபார் பகுதியில் கலவரத்தில் பலர் காயமடைந்ததாக தகவல் கிடைத்தது. ஆனால், அங்கு தங்கியிருந்த எனது சகோதரரை பார்க்க ஓட்டலில் இருந்து தைரியமாக சென்றேன். அப்போது என்னை எச்சரித்த ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், அவர்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல், என்னை யார் என்று அவர்களிடம் கேட்டனர். அதற்கு அந்த குடும்பத்தினர் எங்களது மகன் என்று சொன்னதால் உயிர்த் தப்பினேன். பிறகு எனது சகோதரர் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, என்னைக் காப்பாற்றிய அந்த முஸ்லிம் குடும்பத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த ஆண்டு முதல் ரம்ஜான் மாதத்தில் ஒரு நாள் விரதம் இருந்து வருகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x