Published : 14 Jun 2018 08:53 AM
Last Updated : 14 Jun 2018 08:53 AM

ஆசாராம் பாபு மீதான கொலை வழக்கு; சாட்சி கூறியவரின் மகன் உத்தரபிரதேசத்தில் கடத்தல்- உ.பி.யில் பரபரப்பு

சாமியார் ஆசாராம் பாபு மீதான கொலை வழக்கில், அவருக்கு எதிராக சாட்சி கூறியவரின் மகனை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம், உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு (77). ராஜஸ்தானில் உள்ள தமது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மேற்குறிப்பிட்ட பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த கிரிபால் சிங் (33) என்பவரை 2015-ம் ஆண்டு சிலர் சுட்டுக் கொன்றனர். ஆசாராம் பாபுவின் தூண்டுதலின் பேரிலேயே, இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்சங்கர் விஷ்கர்மா என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப் பட்டார்.

அதன்படி, உத்தரபிரதேசத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக, ராம்சங்கர் கடந்த 7-ம் தேதி சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், ராம்சங்கரின் மகனான தீரஜை (16) மர்மநபர்கள் கடந்த திங்கள்கிழமை கடத்திச் சென்றனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய தீரஜ், ரயில்வே போலீஸாரின் உதவியுடன் நேற்று தமது வீட்டுக்கு வந்தார்.

கொலை வழக்கில் சாட்சியம் கூறியதற்காகவே, தமது மகனை ஆசாராம் பாபுவின் ஆட்கள் கடத்திச் சென்றதாக ராம்சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து, ராம்சங்கரின் குடும்பத்தினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x