Published : 14 Jun 2018 08:52 AM
Last Updated : 14 Jun 2018 08:52 AM

ஆந்திர மாநில சுற்றுலாத் துறை சிறப்பு பஸ்கள் ஏற்பாடு 2 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: தமிழகத்திலும் அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையானை 2 மணி நேரத்திற்குள் தரிசிக்க ஆந்திர மாநில சுற்றுலாத் துறை புதிய திட்டத்தை அமல்படுத்தி யுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை படிப்படியாக குறைக்க ஆந்திர அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது, ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மூலம் புதிய திட்டத்தை அமல் படுத்த ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, ஏசி, தொலைக்காட்சி, வைஃபை வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசு பஸ்களை ஆந்திர சுற்றுலாத்துறை இம்மாத இறுதியில் இருந்து இயக்க உள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

இந்த சொகுசு பஸ்ஸில் 43 பயணிகள் பயணிக்கலாம். இந்த பஸ், விசாகப்பட்டினத்தில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் திருப்பதி வந்தடைகிறது. பின்னர், திருப்பதியிலிருந்து திருமலைக்கு மாற்று பேருந்தில் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். பின்னர் இவர்களுக்கு சிறிது நேரம் தங்கும் இடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் வசதி, குளியல் வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

இதனைத் தொடர்ந்து அனைவரும், தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படுவர். இவர்களுக்காக முன் கூட்டியே தரிசன டிக்கெட் ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை செய்திருக்கும். அதன்படி, இவர்கள் வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து விடுவார்கள்.

இவர்களுக்கு தேவையான லட்டு பிரசாதங்களும் வழங்கப்படும். அதன் பின்னர் மீண்டும், இவர்கள் திருமலையில் இருந்து திருப்பதி அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து சொகுசு பஸ் மூலம் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு சென்று வாயுலிங்கேஸ்வரரை தரிசனம் செய்வர். அதன் பின்னர் இவர்கள், அங்கிருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்வார்கள். 3 நாட்கள் சுற்றுலாவின் அடிப்படையில் இந்த பயணம் நடைபெறும்.இதற்காக ஒரு நபருக்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் குறைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த சுற்றுலா வெற்றிகரமாக இருந்தால், படிப்படியாக விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கோதாவரி மாவட்டங்களில் இருந்தும் இத்திட்டம் தொடங்கப்படும் என திருப்பதி வட்டார சுற்றுலாத் துறை அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்தார். இதேபோன்று, ஆந்திர அரசு, தமிழகத்திலும் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டுமென திருமலைக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த தமிழக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x