Last Updated : 14 Jun, 2018 08:49 AM

 

Published : 14 Jun 2018 08:49 AM
Last Updated : 14 Jun 2018 08:49 AM

தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையை கையில் எடுக்கும் நக்சலைட்டுகள்: மத்திய உள்துறைக்கு உளவு அமைப்பு அறிக்கை

தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினரின் பிரச்சினையை நக்சல் தீவிரவாதிகள் தற்போது கையில் எடுக்க தொடங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உளவு அமைப்பான ஐ.பி. அறிக்கை அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த பீமா - கோரேஹான் கலவரத்தை தூண்டிவிட்டதாகக் கூறி 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் சிலர் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் ஐபி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரதமர் மோடியை கொலை செய்ய நக்சல்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல், ஐ.பி. இயக்குநர் ராஜீவ் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின்போது, நக்சல்களின் வேறு பல திட்டங்கள் குறித்து ஐ.பி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு முழுவதிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினைகளை நக்சலைட்டுகள் கையில் எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஐ.பி. வட்டாரங்கள் கூறியதாவது:

தலித் மற்றும் சிறுபான்மையினர்களின் பிரச்சினைகளை கையில் எடுத்து அரசுக்கு எதிராக போராடுமாறு மனித உரிமை அமைப்புகள், பொதுநல அமைப்புகளை நடத்தும் நக்சல் ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நகர்ப்புறங்களில் வாழும் கல்வி அறிவு பெற்ற மற்றும் முற்போக்கு சிந்தனைக் கொண்ட இளைஞர்களை நக்சல்கள் குறிவைத்துள்ளனர். இதற்கான நிதி உதவிகள் அனைத்தும் நக்சல்களால் மேற்கொள்ளப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

மதுரையில் நக்சல்கள்?

நக்சல்களின் இந்த புதிய இயக்கத்திற்கான தேர்வு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருவதாகவும் தமது அறிக்கையில் ஐ.பி. அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தின் மதுரை நகரும் முக்கிய இடம்பெற்றுள்ளது. மதுரையை தவிர, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், ராஞ்சி, சண்டிகர், புனே, நாக்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x