Published : 13 Jun 2018 07:08 PM
Last Updated : 13 Jun 2018 07:08 PM

மலைபோல் தேங்கிய குப்பையை அள்ள போராட்டக் களத்தில் குதித்த நீதிபதியால் பரபரப்பு: 12 லோடு கழிவுகளை அகற்றிய அதிகாரிகள்

எர்ணாகுளம் மார்கெட் பகுதியில் மலைபோல் குவிந்த குப்பையை அள்ள வலியுறுத்தி நீதிபதி போராட்டக்களத்தில் குதித்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிபதியின் போராட்டத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக 12 லோடுகள் குப்பை அகற்றப்பட்டுள்ளன. துணை நீதிபதியும், மாவட்ட சட்டசேவை ஆணையத்தின் செயலாளருமான ஏ.எம். பஷீரின் செயலால் எர்ணாகுளம் மார்கெட் பகுதி புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளது.

ஆனால், நீதிபதி ஒருவர் குப்பையை அள்ளவலியுறுத்தி சாலையில் 2 மணிநேரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து அதிகாரிகளும் அதிர்ந்து பரபரப்பாக வேலைபார்த்தனர். இல்லாவிட்டால் வழக்கம்போல் குப்பை அள்ளும் பணி நடந்திருக்கும்.

எர்ணாகுளம் மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரிகள் லைசன்ஸ் புதுப்பித்துள்ளாரா என்பது குறித்து ஆய்வு நடத்தத் துணை நீதிபதி எம். பஷீர் நேற்று சென்றார். அப்போது மார்க்கெட் பகுதியில் மலைபோல் குப்பைகளும், காய்கறிக்கழிவுகளும், இறைச்சிக்கழிவுகளும் கொட்டப்பட்டு அந்தப் பகுதியே துர்நாற்றம் வீசியது.

இதைப் பார்த்த துணை நீதிபதி பஷீர் உடனடியாக இந்தக் குப்பையை அள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தக் குப்பைகள் எத்தனை நாட்களாக அள்ளவில்லை என்று அங்கிருந்த தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் துணை நீதிபதி பஷீர் கேட்டுள்ளார். அவர்கள் கடந்த சில நாட்களாகக் குப்பைகள் அள்ளவில்லை எனவும், காய்கறிக்கழிவுகளோடு, மாமிசக்கழிவுகளும் கொட்டப்படுவதால், துர்நாற்றமும், தொற்றுநோயும் பரவும் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, களத்தில் இறங்கிய துணை நீதிபதி பஷீர், சாலையில் நாற்காலியைப் போட்டு அதில் அமர்ந்துவிட்டார். குப்பைகளை அப்புறப்படுத்தும் வரை இந்த இடத்தில் இருந்து நகரமாட்டேன் என்று கூறி போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினார்.

துணைநீதிபதி ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவது அறிந்த அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் விரைந்துவந்து குப்பைகளை அள்ளும்பணியை துரிதப்படுத்தினார்கள். குப்பைகளை அள்ளும் பணி தொடங்கி முடிந்தபின் அங்கிருந்து நகர்ந்தார்.ஏறக்குறைய 12 லோடு குப்பைகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து துணை நீதிபதி பஷீர் கூறுகையில், காய்கறிக்கழிவுகள், மாமிசம் வெட்டும் இடங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் மார்க்கெட் பகுதியில் கொட்டப்பட்டு இருந்தன. நான் இந்த இடத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

இந்தக் குப்பைகளுக்கு மத்தியில் எப்படி தொழில் செய்கிறார்கள், மக்கள் எப்படி வந்து செல்கிறார்கள், தொற்றுநோய் பரவிவிடாதா என பயந்தேன். இந்தப் பகுதியில் குப்பை கொட்டக்கூடாது, குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் மக்கள் தொடர்ந்து இங்கு குப்பைகளை கொட்டி இருக்கிறார்கள்.

இந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடமும் குப்பைகளைக் கொட்டாதீர்கள் என்று எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக புகாரும் நகராட்சி அதிகாரிகளிடமும் அளித்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகள் தேங்குவதால், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தும் வரை இந்த இடத்தை விட்டுநகரக்கூடாது என்று உணர்ந்து இங்கே அமர்ந்துவிட்டேன். ஏறக்குறைய 2 மணிநேரம் நான் அமர்ந்து போராட்டம் நடத்தியதைப் பார்த்து அதிகாரிகள் குப்பையை அள்ளுவதைத் துரிதப்படுத்தினார்கள். இந்த மார்க்கெட் பகுதியில் முறையாக நாள்தோறும்குப்பையை அள்ளுவதாக உறுதி அளித்தனர்.

நகரில் மொத்தம் 30 இடங்களை பொதுகுப்பை கொட்டும் தளமாக மக்கள் மாற்றி இருக்கிறார்கள். அதைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அதில் முதல்கட்டம்தான் எர்ணாகுளம் மார்க்கெட் பகுதியாகும் எனத் தெரிவித்தார்.

துணை நீதிபதி போராட்டத்தில் ஈடுபட்டதைப் பார்த்த கொச்சி மாநகராட்சி நிர்வாகம் லாரிகளையும், மண்அள்ளும் எந்திரங்களையும் கொண்டு வந்து வேக,வேகமாகக் குப்பைகளை அள்ளுவதைப் பார்த்த மக்கள் வியப்படைந்தனர். மேலும், குப்பைகளை முறையாக அள்ளாமல் பணியில் கவனக்குறைவாக இருந்த ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி மேயர் சவுமினி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x