Published : 13 Jun 2018 03:08 PM
Last Updated : 13 Jun 2018 03:08 PM

கர்நாடக இடைத் தேர்தல்: பறிகொடுத்தது பாஜக; காங்கிரஸுக்கு கைகொடுத்தது கூட்டணி கணக்கு

பெங்களூரு ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி வெற்றி பெற்றார். முன்பு பாஜக வெற்றி பெற்ற இந்த தொகுதியை தற்போது ஆளும் கூட்டணி கைப்பற்றியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே 12-ம் தேதி 222 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜய்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவும்யாவும், பாஜக சார்பில் மறைந்த விஜய்குமாரின் சகோதரர் பிரஹலாத்தும் போட்டியிட்டனர். மஜத மேலிடம் அக்கட்சி வேட்பாளரை திரும்ப பெற்றுக்கொண்டதால் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி மோதல் உருவானது. இதனால் இரு கட்சி தலைவர்கள் அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் ஜெயநகரில் வாக்குப்பதிவு நடந்தது. 55 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா முன்னணியில் இருந்தார்.

பிற்பகலில் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா 54,457 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் 51,568 வாக்குகள் பெற்றார். 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். பாஜக வசம் இருந்த இந்த தொகுதியை, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் வென்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களை கைப்பற்றயது. பாஜக 104 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 36 இடங்களிலும் வென்றன. தேர்தலுக்கு பின் காங்கிரஸ் எம்எல்ஏ சித்து நயாம் கவுடு விபத்தில் உயிரிழந்தார். எனினும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. இதன் மூலம் 78 இடத்தை அக்கட்சி எட்டி பிடித்தது. தற்போது மேலும் ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் காங்கிரஸ் எம்எல்ஏ எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x