Last Updated : 13 Jun, 2018 12:03 PM

 

Published : 13 Jun 2018 12:03 PM
Last Updated : 13 Jun 2018 12:03 PM

‘கர்நாடகாவின் வளர்ச்சி ‘பிட்னஸ்’ பற்றித்தான் அக்கறை’- மோடிக்கு பதில் அளித்த குமாரசாமி

நான் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கமுடையவன், ஆதலால், எனது உடற்தகுதி சவாலைக் காட்டிலும், கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி குறித்த பிட்னஸ் குறித்து அதிகமாக அக்கறைப்படுகிறேன் என்று பிரதமர் மோடிக்குக் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி செய்யும் ஒன்றரை நிமிடங்கள் வீடியோவை இன்று வெளியிட்டு தனது உடற்தகுதித் திறனை வெளியிட்டார். அப்போது கர்நாடக முதல்வர் குமாரசாமியும் தனது உடற்தகுதியை வெளியிட வேண்டும் என்று மோடி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்குப் பதிலடியாக குமாரசாமி ட்விட் செய்திருந்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு உடற்தகுதியை நிரூபிக்க பல்வேறு முக்கிய விஐபிக்களுக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, சல்மான்கான், சாய்னா நேவால், விராட் கோலி உள்ளிட்டோர் தங்களின் உடற்தகுதி வீடியோவை வெளியிட்டனர். அப்போது பிரதமர் மோடி உடற்தகுதி வீடியோவை வெளியிட கிரிக்கெட் வீரர் கோலி கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று இன்று பிரதமர் மோடி ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் மோடி நடப்பது, யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை இடம் பெற்றிருந்தன. அந்த வீடியோவுக்குகீழ், பிரதமர் மோடி பதிவிடுகையில், விராட் கோலி உங்கள் சவாலை ஏற்று என்னுடைய உடற்தகுதி வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன். இதேபோல கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியும், டேபிள்டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவும் தங்களின் உடற்தகுதி வீடியோ சோதனையை வெளியிட வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி மோடிக்குப் பதிலடி தரும் விதத்தில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அன்புள்ள பிரதமர் மோடிக்கு, என்னுடைய உடல்நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்தியதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் உடற்தகுதி மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன், உடற்தகுதி அவசியம் என்பதை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய அன்றாட வாழ்க்கையில் யோகாவும், டிரட்மிலில் ஓடுவதும் முக்கிய அங்கமாக இருக்கின்றன. ஆதலால், என்னுடைய உடல்நலத்தைக் காட்டிலும், இப்போது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிட்னஸில்தான் அதிகமான அக்கறை எனக்குத் தேவை. அதற்கு உங்களுடைய ஆதரவும் தேவை

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x