Published : 13 Jun 2018 09:13 AM
Last Updated : 13 Jun 2018 09:13 AM

150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்; செப்டம்பர் 29 முதல் மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாடு: 70 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி செப்டம்பர் 29-ம் தேதி முதல் சர்வதேச சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்தவுள்ளது. இதில் 70 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்பர்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக மத்திய அரசு கொண்டாடவுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்தவுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார். இதில் 70 முதல் 80 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மாநாட்டையொட்டி காந்தி யாத்திரை என்ற நிகழ்ச்சியையும் மத்திய அரசு நடத்தவுள்ளது. மேலும் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி திட்டத்தின் வெற்றிக்கதை மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது. மேலும் திட்டம் குறித்து உலகத் தலைவர்களின் அனுபவங்களையும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டறிய உள்ளனர்.

வெளிநாட்டு அமைச்சர்கள்

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் அமைச்சர்கள் அங்கிருந்து குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய சாந்தி நிகேதன், போர்பந்தர், மகாராஷ்டிராவில் யெரவாடா பகுதிகளுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள 150-வது மகாத்மா காந்தி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியின் தொடக்கமாக இந்த மாநாடு அமையும். வெளியுறவுத் துறை, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

மாநாடு டெல்லி பிரவாசி பாரதிய கேந்திராவில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரையும், தாஜ் பேலஸ் ஓட்டலில் அக்டோபர் 2-ம் தேதியும் நடைபெறும்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x