Published : 13 Jun 2018 09:02 AM
Last Updated : 13 Jun 2018 09:02 AM

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை: பகல் 12 மணிக்குள் முடிவு தெரியவரும்

பெங்களூரு ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸும், பாஜகவும் நேருக்கு நேர் மோதுவதால், எந்த கட்சி வெற்றி பெறும் என கர்நாடகாவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே 12-ம் தேதி 222 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜய்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவும்யாவும், பாஜக சார்பில் மறைந்த விஜய்குமாரின் சகோதரர் பிரஹலாத்தும் போட்டியிட்டனர். மஜத மேலிடம் அக்கட்சி வேட்பாளரை திரும்ப பெற்றுக்கொண்டதால் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி மோதல் உருவானது. இதனால் இரு கட்சி தலைவர்கள் அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஜெயநகரில் வாக்குப்பதிவு நடந்தது. அங்குள்ள 216 வாக்குச்சாவடிகளில் 55 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. படித்தவர்களும், மேல்தட்டு மக்களும் அதிகளவில் வசிக்கும் இந்த தொகுதியில் குறைந்த அளவில் வாக்குகளே பதிவானதால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஜெயநகரில் உள்ள ஆர்.சி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சிசிடிவி கண்காணிப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பகல் 12 மணிக்குள் முடிவு தெரியவரும். காங்கிரஸ், பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகள் நேருக்கு நேர் மோதிய தேர்தலில், எந்த கட்சி வெற்றி பெறும் என கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x