Last Updated : 13 Jun, 2018 08:58 AM

 

Published : 13 Jun 2018 08:58 AM
Last Updated : 13 Jun 2018 08:58 AM

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய கட்சியாக உருவெடுக்கும் ‘பீம் ஆர்மி’

உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் ‘பீம் ஆர்மி’ எனும் தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பு, புதிய அரசியல் கட்சியாக உதயமாக உள்ளது.

உ.பி.யின் சஹரான்பூரில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்த நாளில் பீம் ஆர்மியினரால் மாபெரும் ஊர்வலம் நடத்தப்பட்டது. முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தால் பீம் ஆர்மியினர் மிகவும் பிரபலம் அடைந்தனர். இதற்கு ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரமும் காரணமானது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், அப்பகுதியின் தாக்கூர் சமூகத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதற்கு காரணமாக, பீம் ஆர்மியின் நிறுவனரும் தலைவருமான ராவண் என அழைக்கப்படும் சந்திரசேகர் ஆசாத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதுக்குப் பின் ராவண், உ.பி. மேற்குப் பகுதியின் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறார். ராவணின் புகைப்படங்களுடனான பேனர்களுடன் பீம் ஆர்மியினர், சமீபத்தில் நடைபெற்ற உ.பி. இடைத்தேர்தலில் பாஜகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர். இந்த பிரசாரமும் கைரானா மற்றும் நூர்பூர் தொகுதிகளில் பாஜக தோல்விக்கு காரணமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், 2019 மக்களவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட அரசியல் கட்சி துவக்க பீம் ஆர்மி முடிவு செய்துள்ளது. தனித்து போட்டியிடும் இவர்களுக்கு உ.பி.யின் மேற்கு பகுதியில் மட்டும் செல்வாக்கு உள்ளது. ராவணுடன் கைதான பீம் ஆர்மியின் மூத்த தலைவர் வினய் ரத்தன்சிங், சமீபத்தில் விடுதலையாகி தேர்தலுக்கான பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார். ராவணின் விடுதலைக்காகவும் சட்டப்போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார்.

மாயாவதிக்கு எதிரான கருத்துக்களை கொண்ட பீம் ஆர்மியினர் தனித்து போட்டியிட்டால் பாஜகவிற்கு சாதகமாக வாக்குகள் பிரியும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இவர்களுக்கு ஒருசில தொகுதிகள் அளித்து தம் கூட்டணியில் சேர்க்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் ஆலோசனை செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x