Last Updated : 12 Jun, 2018 04:37 PM

 

Published : 12 Jun 2018 04:37 PM
Last Updated : 12 Jun 2018 04:37 PM

ஆர்எஸ்எஸ், பாஜகவுக்குத் துணிவிருந்தால் என் மீது வழக்குகள் போடட்டும்: ராகுல் காந்தி சவால்

ஆர்எஸ்எஸ், பாஜகவுக்குத் துணிவிருந்தால், என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அதைச் சந்திக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தானேவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்று பேசி இருந்தார். இதையடுத்து, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்த் பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், தேவைப்பட்டால், ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் தங்களின் பேச்சுக்கு வருத்தம் தெரிவியுங்கள் அல்லது வழக்கை எதிர்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி வழக்கை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் இந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜுன் 12-ம் தேதி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஏ.ஐ.சேக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர் தாக்கல் செய்த மனுவில் அவர் சார்ந்திருக்கும் அமைப்பு (ஆர்எஸ்எஸ்) குறித்து நீங்கள் அவதூறாகப் பேசி இருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். நீங்கள் அறிக்கையைப் பெற்றுக்கொண்டீர்களா என ராகுலிடம் கேட்டார். அதற்கு ராகுல் காந்தி ஆம் என்றார். இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், ராகுல் காந்தி நீதிமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு இன்றுபேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''என்னுடைய போராட்டம், மோதல் அனைத்தும் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிராகத்தான். பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும், நாட்டில் இளைஞர்கள் இடையே அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் பேச மறுக்கிறார். ஆனால், குறிப்பிட்ட சில பணக்காரர்களுக்காகக் கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு. ஆனால், விவசாயிகளுக்குக் கடனும், கடன் தள்ளுபடியும் அளிக்க மறுக்கிறது.

வானொலியில் மான்கிபாத் (மனதில் இருந்து பேசுகிறேன்) என்று பேசும் பிரதமர் மோடி,(காம் கி பாத்) இளைஞர்களின் வேலைவாய்ப்பு, விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசாமல் மவுனமாக இருக்கிறார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் துணிவிருந்தால், எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் என் மீது போடட்டும். அத்தனை வழக்குகளிலும் சட்டப் போராட்டம் நடத்தி, பொய் வழக்குகள் என நிரூபித்து விடுதலையாவேன்.''

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x