Last Updated : 12 Jun, 2018 03:15 PM

 

Published : 12 Jun 2018 03:15 PM
Last Updated : 12 Jun 2018 03:15 PM

ஓட்டுக்குப் பிச்சை எடுக்கும் அரசியல் கட்சிகளே இப்தார் விருந்து வைக்கின்றன: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

 

ஓட்டுக்காகப் பிச்சை எடுக்கும் அரசியல் கட்சிகள்தான் இப்தார் விருந்து வைக்கின்றன என்று தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் லோத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், இரு சமூகத்தினருக்கு இடையே விரோதத்தை உண்டாக்கியதாகவும் அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏ  டி ராஜா சிங் லோத். இவர் வீடியோவில் பேசி அதை பேஸ்புக்கில் பதிவேற்றேம் செய்திருந்தார். அதில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி இருந்தார். அதில் டி.ராஜா பேசியதாவது:

புனித ரமலான் மாதத்தில் ஏராளமான அரசியல்கட்சித் தலைவர்கள் இப்தார் விருந்து வைக்கிறார்கள். தெலங்கானாவிலும் ஏராளமான கட்சிகள் தலையில் குல்லா அணிந்தும், செல்பி எடுத்துக் கொண்டும் இப்தார் விருந்தில் பரபரப்பாக இருக்கின்றன.

அந்தக் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக இப்தார் விருந்து வைக்கிறார்கள். ஆனால், நான் அப்படிப்பட்டவன் இல்லை. அனைத்து மதங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறேன். ஓட்டுக்காக பிச்சை எடுக்கும் கட்சிகள்தான் இப்தார் விருந்து நடத்துகின்றன.

உலகில் முஸ்லிம்களுக்காக 50 நாடுகள், கிறிஸ்தவர்களுக்காக 100 நாடுகள் இருக்கும் போது, இந்துக்களுக்காக ஒரு நாடு ஏன் இந்தியா இருக்கக்கூடாது. மாநிலம் நிதிச்சிக்கலில் இருப்பதாகவும் மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறுகிறார். ஆனால், ரூ.66 கோடி செலவு செய்து இப்தார் விருந்து வைக்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு முன் பலமுறை இதேபோன்று சர்ச்சைக்குரிய வகையில் ராஜா பேசி அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த போலீஸார் தாமாக முன்வந்து டி ராஜா எம்எல்ஏ மீத ஐபிசி 153 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து பலாக்னுமா மண்டல போலீஸ் துணை ஆணையர் சயத் பியாஸ் கூறுகையில், இரு மதத்தினருக்கு இடையே விரோதத்தை உண்டாக்கும் வகையில் பேசிய பாஜக எம்எல்ஏ டி ராஜா மீது ஐபிசி பிரிவு 153ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x