Last Updated : 12 Jun, 2018 08:52 AM

 

Published : 12 Jun 2018 08:52 AM
Last Updated : 12 Jun 2018 08:52 AM

பாஜக வேட்பாளர் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு: நாளை முடிவு வெளியாகிறது

பெங்களூருவில் உள்ள ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை முடிவு வெளியாகிறது.

க‌ர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னதாக பெங்களூரு ஜெயநகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜய் குமார் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 2.03 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதிக்கு ஜூன் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து காங்கிரஸ் சார்பாக முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவும்யா, பாஜக சார்பாக மறைந்த விஜய் குமாரின் சகோதரர் பிரஹலாத் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இருவரும் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியோடு மஜத ஆட்சி அமைத்திருப்பதால் அக்கட்சி தனது வேட்பாளரை திரும்ப பெற்றது. இதனால் ஜெயநகர் தொகுதியில் 19 வேட்பாளர்கள் களத்தில் இருந்தபோதும் காங்கிரஸ், பாஜக இடையே நேருக்கு நேர் மோதல் உருவானது.

ஏற்கெனவே அறிவித்தபடி நேற்று காலை 7 மணிக்கு ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 216 இடங்களில் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கன்னட நடிகை பாரதி, காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா, பாஜக வேட்பாளர் பிரஹ‌லாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் காலையிலே வரிசையில் நின்று வாக்களித்தனர். பிற்பகல் 1 மணி வரை 34 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் மாலை 5 மணிக்கு 51 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 79, (மஜத, பகுஜன் சமாஜ் கூட்டணி 38), மற்றவை 2 இடங்களை பிடித்துள்ள நிலையில் இந்த தொகுதியை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x