Published : 12 Jun 2018 08:49 AM
Last Updated : 12 Jun 2018 08:49 AM

2019-ம் ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் பகுஜன் சமாஜுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் திட்டவட்டம்

எதிர்வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலிலும், 2017-ம் ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றி பெற்ற பாஜக, அங்கு தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அம்மாநிலத்தில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வந்த சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தற்போது கைகோர்த்துள்ளன. அண்மையில் அங்கு நடைபெற்ற பல்வேறு மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும், இந்தப் புதிய கூட்டணி அமோக வெற்றி பெற்று பாஜகவை படுதோல்வி அடையச் செய்துள் ளன.

இந்தச் சூழலில், எதிர்வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ளது. எனினும், இதுதொடர்பான கேள்விக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.

இந்தப் பின்னணியில், உ.பி.யின் மணிப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

உத்தரபிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கு, சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் கூட்டணியில் இருக்க வேண்டியது அவசியம். இதுதான் தற்போதைய எதார்த்த சூழ்நிலை. எனவே, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பகுஜன் சமாஜுடன் நாங்கள் கூட்டணியில் இருப்போம். இக்கூட்டணிக்காக சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாதி தயாராக இருக்கிறது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x