Published : 12 Jun 2018 08:19 AM
Last Updated : 12 Jun 2018 08:19 AM

அரசுத் துறைகளில் ஆற்றல் பெருக்கும் புது வரவு

ந்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, ஓர் அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி, இணைச் செயலாளர் பதவிக்கு இணையான 10 இடங்கள், அரசுப் பணிக்கு வெளியே உள்ள அனுபவம் வாய்ந்த நிபுணர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

‘யு.பி.எஸ்.சி.’ நடத்துகிற குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்.) தேர்வு மூலம் மட்டுமே, மத்திய அரசுத் துறைகளில் உள்ள குரூப் 1 பதவிக்கு நேரடி பணி நியமனம் நடைபெறுகிறது. மற்றபடி, துறையில் துணை நிலைப் பதவிகளில் சேர்ந்தவர்கள், பணி மூப்பின் அடிப்படையில், பதவி உயர்வு பெறலாம். இந்த இரண்டு வழிகள் அல்லாமல், மூன்றாவதாக ஒரு வழியை இப்போது இந்திய அரசு திறந்து விட்டிருக்கிறது.

இதன் தொடக்கமாக 10 பணியிடங்கள் மட்டும் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப இருப்பதாக மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவிக்கை தெரிவிக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, 40 வயது நிரம்பிய, இணைச் செயலாளர் பதவிக்கு இணையான பொறுப்பில் உள்ளவர்கள் இம்மாதம் 15-ம் தேதி முதல் அடுத்த மாதம் முடிய ‘ஆன்லைன்’ மூலம் அனுப்பலாம்.

இந்த வாய்ப்பு, தனியார் துறையில், பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிகிற அலுவலர்களுக்கு மட்டுமே ஆனதல்ல. பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள்தாம், முன்னுரிமை பெறுவார்கள் என்று கூடக் கருதலாம். அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் இருந்து வருகின்றன.

தற்போதுள்ள நடைமுறைப்படி, ஊழியர்கள், அலுவலர்களை, பணியாளர் தேர்வாணையங்கள், போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன. இதில், ‘யு.பி.எஸ்.சி.’ மிகச் சிறந்த பங்காற்றி வருகிறது. சந்தேகமில்லை. ஆனாலும், அரசுத் துறைகளுக்கு வெளியே, அவரவர் துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்டு விளங்குகிற திறமையாளர்கள் ஏராளமானோர் இருக்கவே செய்கின்றனர். இவர்களின் அறிவு, ஆற்றல், அனுபவம், அரசுப் பணிகளில் அங்கீகரிக்கப்பட்டால் அவர்களின் பங்களிப்பையும் அரசு பெற்று பயன்படுத்திக் கொண்டால், பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

எத்தனை ஆண்டுகள் பணி புரிந்தாலும், ஓரளவுக்கு மேல் அரசுப் பணியில் திறன்களை வளர்த்துக் கொள்கிற சாத்தியங்கள் மிகக் குறைவாகவே உண்டு. அதுவும், பல்வேறு சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், சுய சிந்தனையுடன் கூடிய நவீன யுக்திகளை முயற்சித்துப் பார்க்கிற வாய்ப்புகள், அநேகமாகக் கிட்டுவதே இல்லை. இதனால்தான், பல சமயங்களில், அரசுத் துறைகளின் அணுகுமுறை, செயல்பாடுகள், கால மாற்றத்துக்கேற்ப, சிறப்பாக அமைய முடியாமல் போகின்றன. நீர் மேலாண்மை, நெடுஞ்சாலைப் பராமரிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் நாம் இன்னமும் மேம்பட்ட முறையில் செயல்பட வேண்டி இருக்கிறது.

இதற்கான பல வழிகளில் ஒன்று, ‘வெளியில் உள்ள’ திறமைகளை அரசுப் பணிகளுக்கு இழுப்பது. இந்தத் திசையில்தான் தற்போது இந்திய அரசு பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. இது ஒன்றும் முற்றிலும் புதிதல்ல. பல்வேறு துறைகளில் பல்வேறு நிலைகளில் ‘அவுட்சோர்சிங்’ முறையும் ஒப்பந்தப் பணிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பில், சில துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் நிபுணர்களின் அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டுதல், மிக நிச்சயமாக ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர வல்லது. விவசாயம், கூட்டுறவு, விவசாயிகள் நலன், சுற்றுச் சூழல், வனங்கள், பருவ நிலை மாற்றம், நவீன புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகள், உண்மையிலேயே புதிய சிந்தனைகளை புதிய முயற்சிகளை உள்வாங்க வேண்டி முன்னேற வேண்டிய நிலையில்தாம் இருக்கின்றன.

வேளாண்மை விற்பன்னர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் / களப் பணியாளர்கள், அரசுத் துறைக்குள் வந்து அறிவியல்பூர்வமான, ஆக்கபூர்வமான, நீண்ட கால நன்மை பயக்கக் கூடிய திட்டங்களை வடிவமைக்க முடியுமானால், அத்தனை பேருக்குமே எத்தனை நல்லது....?

இந்திய விவசாயம் சந்தித்து வரும் சவால்கள், சுற்றுச்சூழலில் நாம் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், சிறு தொழில் துறை கடந்து வரும் நெருக்கடிகள், இளைஞர் நலன், புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற பல முனைகளில், அரசுத் துறைகளுக்கு வெளியில் இருந்து வருகிற நேர்மையான செயல் திறன் மிக்க அனுபவசாலிகள், நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும். பத்து பேர் வருவதால் இத்தனையும் நடந்து விடுமா....? இது ஒரு பரிட்சார்த்த முயற்சியாகத்தான் தோன்றுகிறது. இது தொடரலாம்; விரிவடையலாம். இந்த முயற்சியின் வெற்றி / தோல்வியில், வருங்காலம் இதனைத் தீர்மானிக்கும். சில ஐயங்கள், சில அச்சங்கள் எழத்தான் செய்கின்றன. பாரபட்சம் இன்றி, வெளிப்படையான, நேர்மையான தேர்வு நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். ‘எல்லாமே நியாயமாகத்தான் நடைபெற்று இருக்கிறது’ என்கிற எண்ணம் எல்லாருக்கும் ஏற்பட வேண்டும்.

அதற்கான நெறிமுறைகள் சற்றும் பிறழாமல் பின்பற்றப்பட வேண்டும். அரசு நிர்வாகம் செம்மை அடைய வேண்டும் என்பதை மட்டுமே, ஒரே இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்படுமானால், இந்த நிர்வாக மாற்றம் உறுதியாய், புதிய பாதைக்கு வழி வகுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x