Last Updated : 11 Jun, 2018 01:13 PM

 

Published : 11 Jun 2018 01:13 PM
Last Updated : 11 Jun 2018 01:13 PM

‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு ’ - மத்திய அரசு மீது சிதம்பரம் கடும் சாடல்

மத்தியஅரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளன, 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘மத்தியில் ஆளும் பாஜக அரசின் தோல்வி அடைந்த நிர்வாகம், தவறான கொள்கைகள்தான், நாட்டில் விவசாயிகள் பிரச்சினை அதிகரித்தற்கும், இளைஞர்களிடையே வேலையின்மை உயர்ந்ததற்கும், பொருளாதாரம் தோல்வி அடைந்ததற்கும் முக்கியக் காரணங்களாகும்

மத்திய அரசின் கொள்கைகளாலும், நடவடிக்கைகளாலும், விவசாயிகளின் விரக்தி இன்று கோபமாக மாறி, அவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை இல்லாததும் கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் உயர்வு இல்லாததும்தான் இந்த சிக்கலுக்கு முக்கியக்காரணமாகும்.

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை இன்று போதுமானதாக இல்லை. மத்திய அரசு வாக்குறுதி அளித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையோடு சேர்த்து 50 சதவீதம் விலை என்ற மோடியின் பேச்சு வெற்றுவாக்குறுதி என்பது அனைத்து விவசாயிகளுக்கும் தெரியும்.

ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை குறித்த ஆய்வு அறிக்கையில், 48 சதவீதபேர் நாட்டின் பொருளாதார சூழல் கடந்த 12 மாதங்களாக மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆட்சிக்கு வந்தபின் ஆண்டுக்கு ஆண்டு நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த வேலைவாய்ப்பும் உருவாகவில்லை. அதுமட்டுமல்லாமல், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் நாட்டில் உருவான வேலைவாய்ப்பு வீதம், வேலையிழப்பு, தொழிலாளர் கூலி உயர்வு குறித்த தொழிலாளர் துறையின் அறிக்கை வெளியிடப்படாதது ஏன்?

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 2015-ம் ஆண்டு 8.2 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2017-18-ம் ஆண்டில் 6.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த 2017-18-ம் ஆண்டில் தமிழகத்தில் சிறு, குறுந்தொழில்களில் ஈடுபட்டு இருந்த 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர், 50 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுவிட்டன, சிறு,குறுந்தொழில்கள் மூலம் செய்யப்படும் முதலீடு ரூ.11 ஆயிரம் கோடியாகக் குறைந்துவிட்டது என என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி இன்னும் வர்த்தகர்களையும், தொழில்செய்பவர்களையும் துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது அதில் உள்ள குறைகள் களையப்படவில்லை. மக்களுக்கு தேவையான சமூக நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்புச் சட்டங்களை பாஜக அரசு நிராகரித்து வருகிறது.

ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துக்கு போதுமான நிதி இல்லை. ஏராளமான தொழிலாளர்களுக்கு ஊதியப் பாக்கி இருக்கிறது.

மத்திய அரசின் வேளாண்மை காப்பீடு 30 சதவீதம் விவசாயிகளையை சென்றடைந்துள்ளது. மக்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் சுகாதாரத்திட்டம் மோடி அறிவித்ததும் வெறும் வெற்றுவார்த்தை’’ என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x