Published : 10 Jun 2018 09:04 AM
Last Updated : 10 Jun 2018 09:04 AM

பிஹார் பிளஸ் 2 தேர்வில் கணக்கு வழக்கு இல்லாமல் மதிப்பெண்களை அள்ளி வழங்கிய அரசு: மொத்த மதிப்பெண்களை விட அதிகம் கொடுத்தது அம்பலம்

‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பிஹாரில் நடந்த பிளஸ் 2 தேர்வில் போதிய வருகைப் பதிவு இல்லாமல் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதே தேர்வில் மொத்த மதிபெண்ணை விடவும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் பிஹார் மாணவி கல்பனா குமாரி 720-க்கு 691 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வியில் பின்தங்கிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு தேவை என்ற நிலையில், அது இல்லாமலேயே அவருக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ‘நீட்’ பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் பயிற்சி எடுத்துக்கொண்டதால் வகுப்புக்கு சரிவர செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் பிஹார் பள்ளித் தேர்வு வாரியம் நடத்திய பிளஸ் 2 பொதுத் தேர்வில் மேலும் பல குளறுபடிகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்த தேர்வில் மொத்த மதிப்பெண்ணை விடவும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக சில மாணவர்கள் கூறுகின்றனர். சிலர் தாங்கள் எழுதாத பாடத்துக்கும் மதிப்பெண் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் புகார்

ஆர்வால் மாவட்டத்தை சேர்ந்த பீம் குமார் என்ற மாணவர், கணிதம் தியரி தேர்வில் மொத்த மதிப்பெண் 35-ஐ விட கூடுதலாக 38-ம், கணிதம் கொள்குறி வகை தேர்வில் 35-க்கு 37-ம் பெற்றுள்ளார்.

இதுபோல் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு இயற்பியல் தியரி தேர்வில் 35-க்கு 39 மதிப்பெண்ணும் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் குமார் என்ற மாணவருக்கு கணிதம் கொள்குறி வகை தேர்வில் 35-க்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வைசாலியை சேர்ந்த மாணவி ஜானவி சிங் கூறும்போது, “நான் உயிரியல் தேர்வு எழுதவில்லை. என்றாலும் எனக்கு 18 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

விடைத்தாள் சரியாக மதிப்பீடு செய்யப்படாமல் குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழில் பிழை மற்றும் மதிப்பெண் தொடர்பாக சந்தேகம் உள்ளவர்கள் வரும் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பிஹார் பள்ளித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x