Published : 07 Jun 2018 01:42 PM
Last Updated : 07 Jun 2018 01:42 PM

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த பீகார் மாணவி குறித்து புதிய சர்ச்சை: வருகைப்பதிவு இல்லை என புகார்

நீட் தேர்வில் நாடுதழுவிய அளவில் முதலிடம் பிடித்த பீகார் மாணவி கல்பனா குமாரி குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் போதிய அளவு வருகைபதிவு இல்லாத நிலையில் விதிமுறையை மீறி அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) நடைபெற்று வருகிறது. அதன்படி, நாடுமுழுவதும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு சமீபத்தில் நடந்தது. தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

பெரும் சர்ச்சைக்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. இதில் மற்ற பல மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. வெறும் 39.9 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநில மாணவர்கள், தமிழகத்தை விடவும் அதிகஅளவில் வெற்றி பெற்றனர். தமிழகத்தை சேர்ந்த ஒரே மாணவி மட்டும் 12வது இடம் பிடித்தார்.

பீகார் மாணவி

இந்த தேர்தவில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி என்ற மாணவி 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பின்தங்கி இருந்த மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அவருக்கு தற்போது பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கல்பனா குமாரி பீகார் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இதில் 500க்கு 433 மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாத நிலையில் விதியை மீறி தேர்வு எழுத அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

டெல்லியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் சேர்ந்த கல்பனா குமாரி கடந்த 2 ஆண்டுகளாகவே தீவிரமாக தேர்வுக்கு தயாராகியுள்ளார். இதனால், பிளஸ் 2 தேர்வை பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை. டெல்லியில் தங்கி பயிற்சி பெற்றதால், அவர் பீகாரில் உள்ள பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் இருந்தது.

இதனால் பிளஸ் 2 படித்தபோது வகுப்புக்கு சரியான முறையில் அவர் செல்லவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் ஆகும். ஆனால் அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாதபோதும், சிறப்பு அனுமதி வழங்கி அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பீகார் மாநில கல்வியமைச்சர் கிருஷ்ணாந்த் வர்மா கூறுகையில் ‘‘நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மாணவி கல்பனா குமாரி பீகாருக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்துள்ளார். அதை அனைவரும் பாராட்ட வேண்டும். அதை விடுத்து அவரது வருகைப்பதிவு குறித்து சர்ச்சை எழுப்புவது தேவையில்லாதது. உரிய விதிமுறைகளை பின்பற்றியே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். அவரை பற்றி யாரும் சர்ச்சை எழுப்ப வேண்டாம்’’ எனக் கூறினார்.

இதுபோலவே பிளஸ் 2 தேர்வு எழுத குறைந்தபட்ச வருகைப்பதிவு அவசியம் என்ற விதிமுறை இல்லை என பீகார் மாநில கல்வித்துறையும் விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x