Last Updated : 07 Jun, 2018 08:46 AM

 

Published : 07 Jun 2018 08:46 AM
Last Updated : 07 Jun 2018 08:46 AM

இந்து மதத்தை சேர்ந்தவர் நடத்திய மத நல்லிணக்க இப்தார் விருந்து: மகனை கொலை செய்த குடும்பத்தினருக்கும் அழைப்பு

டெல்லியின் மேற்குப் பகுதிவாசியான இந்து மதத்தைச் சேர்ந்த யஷ்பால் சக்சேனா நேற்று முன் தினம் முஸ்லீம்களுக்காக மதநல்லிணக்க இப்தார் விருந்து நடத்தி இருக்கிறார். இதில், தன் மகனை காதல் விவகாரத்தில் கொலை செய்த குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி மேற்கு டெல்லியின் கயாலா மார்கெட் பகுதியில் அங்கித் சக்சேனா (23) எனும் போட்டோகிராபர் படுகொலை செய்யப்பட்டார். இவர் நட்புடன் பழகிய ஒரு முஸ்லீம் இளம்பெண்ணின் குடும்பத்தினர் இந்த கொலையை செய்ததாக தெரிய வந்தது. அப்பகுதியில் இந்து-முஸ்லீம்கள் இடையே பதற்றம் நிலவியது. இதில் தலையிட்ட அங்கித்தின் தந்தையான யஷ்பால் சக்சேனா, ‘தயவுசெய்து இந்தப் பிரச்சினையில் யாரும் கலவரம் நேரும் வகையில் பேச வேண்டாம்’ எனக் கூறி அப்பகுதியினரை சாந்தப்படுத்தி இருந்தார். இதில் யஷ்பால் காட்டிய மதநல்லிணக்கச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அங்கித் கொலை வழக்கில் அவரது முஸ்லீம் பெண் நண்பரின் தாய், தந்தை உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஜூலையில் டெல்லி நீதிமன்றத்தில் துவங்க உள்ளது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு முஸ்லீம்களுக்காக ஒரு இப்தார் விருந்து நடத்தி யஷ்பால் மீண்டும் பலரின் பாராட்டுதலை பெற்றுள்ளார். இந்த விருந்திற்கு தம் மகனை கொலை செய்த குடும்பத்தாரையும் யஷ்பால் அழைத்திருந்தார்.

இதை கேள்விப்பட்டு அங்கு வந்த டெல்லி செய்தியாளர்களிடம் யஷ்பால் கூறும்போது, ‘‘எனது ஒரே மகனை கொன்றது ஒரு முஸ்லீம் குடும்பத்தினர்தான். அதற்காக அனைத்து முஸ்லீம்களும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் என குற்றம் சுமத்துவது தவறு. இந்த பிரச்சினையில் என்னை இழுத்து, மதப் பிரச்சனையாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்’’ எனத் தெரிவித்தார்.

சுமார் 200 முஸ்லீம்கள் கலந்து கொண்ட இப்தாருக்கு, யஷ்பாலின் இந்து நண்பர்கள் உதவினர். இவர்களுடன் உ.பி.யின் கோரக்பூரில் பிராணவாயு இன்றி குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியான அரசு மருத்துவமனை மருத்துவர் கபீல்கானும் ஜாமீனில் உள்ளதால் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டு சக்சேனாவின் மதநல்லிணக்கச் செயலை பாராட்டினார். அப்பகுதி முஸ்லீம்களும் சக்சேனா, அரசியல் உள்ளிட்ட எந்த உள்நோக்கத்துடனும் இந்த இப்தார் விருந்தை நடத்தவில்லை என்பதை அறிந்து விருந்தில் கலந்து கொண்டு பாராட்டி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x