Published : 04 Jun 2018 06:01 PM
Last Updated : 04 Jun 2018 06:01 PM

‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல்

காலாவைவிட காவிரிதான் முக்கியம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடம் கிடைக்காததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக எச்.டி.குமாரசாமி உள்ளார்.

கடந்த மாதம் குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவுக்குக் கூட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரைக் கமல் ஹாசன் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்திக்க கமல் ஹாசன் இன்றுகாலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். பெங்களூருவில் முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்த கமல் ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். அதில் குறிப்பாக காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அவரிடம் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப்பின் முதல்வர் எச்.டி. குமாரசாமியும், கமல்ஹாசனும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது குமாராசாமியிடம் நிருபர்கள் காவிரி விவகாரம் குறித்து பேசத் தயாராக இருக்கிறீர்களா எனக் கேட்டபோது, அதற்கு பதில் அளித்தஅவர், தமிழக அரசு தயாராக இருந்தால், நானும் தயார்.

இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகமான உறவு நிலவ வேண்டும். இரு மாநிலங்களின் விவசாயிகள் நலன் கருத்தில் கொள்ளப்படும். எந்தவிதமான பிரச்சினை இருந்தாலும், இருவரும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவேண்டும். விவசாயிகள் நலன் மிகவும் முக்கியமானது. கடந்த 100 ஆண்டுகளாக நிலவும் காவிரி விவகாரத்தால், இரு மாநில விவசாயிகளும் மனச்சோர்வடைந்து இருக்கிறார்கள்.

எங்களுடைய இந்தச் சந்திப்பில், காவிரி விவகாரத்தைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. காலா திரைப்படம் ரிலீஸ் குறித்தோ, ரஜினிகாந்த் குறித்தோ பேசவில்லை. இது முழுக்க திரைத்துறை தொடர்புடையதாகும் எனத் தெரிவித்தார்.

கமல் ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், நான் தமிழக மக்களின் பிரதிநிதியாக இங்கு வந்து கர்நாடக முதல்வரை காவிரிக்காகச் சந்தித்தேன். ஒரு நடிகராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இங்கு வரவில்லை. இருமாநிலங்களுக்கு இடையே பாலமாக இருந்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன். குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்குத் தண்ணீர் தேவை. என்னுடைய கோரிக்கைக்கு முதல்வர் குமாரசாமி சாதகமான பதில் அளித்துள்ளார். இங்குள்ள மக்களும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் பேச்சில் இருந்து அறிய முடிந்தது.

இரு மாநில மக்களும் ஒருங்கிணைய வேண்டும் அதுதான் இப்போது முக்கியம். மக்களின் மனநிலையை அறிந்து அதன்படியே முன்நோக்கிச் செல்லவேண்டும். குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ, திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது என்றார்.

இதன் பின்னர் நிருபர்கள், `காலா' திரைப்படம் குறித்து பேசினீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த கமல், 'காலா' கர்நாடகாவில் வெளியாவது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. திரைப்படங்களைவிடக் காவிரி நீர் மிக முக்கியமானது. எனவே, காவிரி குறித்து மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x