Published : 04 Jun 2018 02:18 PM
Last Updated : 04 Jun 2018 02:18 PM

நீட் தேர்வு முடிவுகள்: வெளியிட்டது சிபிஎஸ்இ - முதல் மதிப்பெண் 691

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் முன்னதாக, 12:30 மணியளவில் வெளியாகின.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடுமுழுவதும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு  சமீபத்தில் நடந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நடந்த நீட் தேர்வை விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26,725 மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது, கேள்வித்தாள் குழப்பம், விடைத்தாள் திருத்தியதில் விதிமீறல் உள்ளது எனக் கூறி சங்கல்ப் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டது.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 2:00 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே 12:30 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் அகில இந்திய அளவில் கல்பனா குமாரி என்ற மாணவி 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவி கல்பனா குமாரி, இயற்பியலில் 180க்கு 171 மதிப்பெண்களும், வேதியியலில் 180க்கு 160 மதிப்பெண்களும் உயிரியலில் 360க்கு 360 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

13 லட்சத்திற்கும் அதிமான மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x