Last Updated : 03 Jun, 2018 05:48 PM

 

Published : 03 Jun 2018 05:48 PM
Last Updated : 03 Jun 2018 05:48 PM

இந்த இடத்திலும் காவி நிறமா?- ஆதித்யநாத் வருகைக்காக மாறிய கழிப்பறைகள்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகைக்காக கழிப்பறையைக் கூட காவி மயமாக அதிகாரிகள் மாற்றிய விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யாத் இருந்து வருகிறார். முதல்வராக ஆதித்யநாத் வந்தபின், தலைமைச் செயலகக் கட்டிடம், போலீஸ் நிலையம், அதிகாரிகள், அரசு ஊழியர்களின் அடையாள அட்டை, அரசுப் பேருந்துகள், மதரசாக்கள் என அனைத்தையும் காவி நிறத்துக்கு மாற்றி வருகிறார்.

ஆதித்யநாத் ஆர்வத்தைப் பார்த்த அதிகாரிகள் அவர் நிகழ்ச்சிக்குச் சென்றாலும், காவி நிறத்தை பிரதானப்படுத்தி வருகின்றனர். தனிப்பட்ட முறையில் முதல்வரிடம் நல்ல பெயர் எடுக்கவும், முதல்வரின் தனிப்பட்ட கவனத்தை ஈர்க்கவும் அரசு நிகழ்ச்சிகள், முதல்வர் கலந்து கொள்ளும் விழாக்கள் அனைத்திலும் காவி நிறத்தைப் புகுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஹர்தோய் மாவட்டத்தில் அரசு சார்பில் ஏழைகளுக்கு இலவச வீடுகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்க முதல்வர் ஆதித்யநாத் வருகை தர இருந்தார். இதையொட்டி, அங்கு ஏழை மக்களுக்கு வழங்கப்பட இருந்த வீடுகளுக்கும், கழிப்பறைகளுக்கும் காவிநிறம் பூசப்பட்டு இருந்தன.

அதுமட்டுமல்லாமல், ஆதித்யநாத் பயன்படுத்துவதற்காக தயார் செய்யப்பட்ட கழிப்பறையில் வெள்ளி நிற டைல்ஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அதை நீக்கிவிட்டு, காவிநிறத்தில் டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டன. இந்தக் காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பியதால், வைரலானது.

இது குறித்து அதிகாரிகளிடம் கழிப்பறை கூட காவி நிறத்தில் தயாராகிறதே எனக் கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.

இது குறித்து சமாஜ்வாதிக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அப்துல் ஹபிஸ் காந்தி கூறுகையில், ''உத்தரப் பிரதேச அரசு காவி நிறத்தில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், வளர்ச்சியில் ஆர்வத்தைக் காட்டலாம். நிறத்தின் அடிப்படையில் நடக்கும் அரசியல் வளர்ச்சியை மாநிலத்துக்குக் கொண்டு வந்து சேர்க்காது. அனைத்து விதமான துறைகளிலும் யோகியின் அரசு தோல்வியைத் தழுவி இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x