Last Updated : 29 May, 2018 12:42 PM

 

Published : 29 May 2018 12:42 PM
Last Updated : 29 May 2018 12:42 PM

3 நாட்கள் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை; கேரளாவில் இன்று தொடங்கியது: ஐஎம்டி அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை  கேரளாவில் இன்று தொடங்கியதாக இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

தனியார் வானிலை மையமான ஸ்கேமெட், தென்மேற்கு பருவமழை நேற்றே கேரளாவில் தொடங்கிவிட்டதாக அறிவித்திருந்த நிலையில், இந்திய வானிலை மையம் இன்றுதான் பருவமழை தொடங்கியதாக அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் இறுதிவரை தென் மாநிலங்களில் மழையைக் கொடுக்கும். வழக்கமாக ஜூன் 1-ம் தேதிதான் தென்மேற்கு பருவமழை தொடங்கும், ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 3 நாட்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கியது.

இந்திய வானிலை மையத்தின் கணிப்பின்படி, இந்த ஆண்டு பருவமழையின் அளவு 97 சதவீதம் அதாவது இயல்பாகவே இருக்கும் என்று எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 10-ம் தேதிக்குப் பின் கேரளாவின் மினிகாய், அமினி,திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆழப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், கர்நாடகாவின் குடகு, மங்களூரு ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 2.5 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதற்கான வலுவான அறிகுறிகளாகும்.

மேலும் மேற்கு நோக்கி வீசும் காற்று கடல்மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் வீசுவது உள்ளிட்ட பல காரணிகள் தென்படுவதால், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மிருத்துன்ஜே மொகாபத்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், தெற்கு அரேபியக்கடல், மாலத்தீவின் ஒருசில பகுதிகள், கேரளாவின் பெரும்பாலான பகுதிகள், தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலை ஓரப்பகுதிகள், வங்காள விரிகுடாவின் தெற்குப்பகுதி, அந்தமான் நிகோபர் கடற்கரைப்பகுதி, ஆகியவற்றில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 47 ஆண்டுகளாக ஒரு பார்வை…

monsoonjpg100 

கடந்த 47 ஆண்டுகளில் பருவமழை தொடங்குவதில் தேதிகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பருவமழை தொடங்குவது ஒரு சிலநாட்கள் தாமதமாகவும், முன்கூட்டியும் தொடங்கி இருக்கிறது. ஆனால், சரியாக ஜுன் 1-ம்தேதி தொடங்கியது 3 முறை மட்டுமே.

அதாவது 1971-ம் ஆண்டில் இருந்து 3 முறை மட்டுமே பருவமழை சரியாக ஜூன் 1-ம் தேதி தொடங்கி இருக்கிறது. அதாவது, 1980, 2000, மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தென்மேற்கு பருவமழை சரியாகத் தொடங்கியது

கடந்த 2004-ம் ஆண்டு, மே 18-ம் தேதியே தென் மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. மிகவும் தாமதமாக கடந்த 1972-ம் ஆண்டு ஜூன் 18-ம்தேதி பருவமழை தொடங்கியது.

கடந்த 47 ஆண்டுகள் தவிர்த்து, 20 ஆண்டுகளில் ஜூன் 1-ம்தேதி பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி இருக்கிறது. 10 ஆண்டுகளில் பருவமழை முன்கூட்டியே அதாவது மே 26-ம் தேதியைத் தொடங்கி இருக்கிறது.

அதேசமயம் ஜூன் 1-ம்தேதிக்குப் பின், பருவமழை தாமதமாக 27 முறை தொடங்கி இருக்கிறது. 9 முறை, ஜூன் 5-ம்தேதி தொடங்கி இருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 2004-ம் ஆண்டு தென் மேற்கு பருவமழை மே 18-ம் தேதி முன்கூட்டியே தொடங்கியபோது, மழை என்பது இயல்புக்கும் குறைவாக 86 சதவீதமே பெய்து, வறட்சி நிலவியது.

ஆனால், கடந்த 1983-ம் ஆண்டு மிகவும் தாமதமாக ஜூன் 13-ம் தேதி பருவமழை தொடங்கிய போது, இயல்புக்கும் அதிகமான மழை பெய்து 113 சதவீதம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x