Published : 26 May 2018 08:51 AM
Last Updated : 26 May 2018 08:51 AM

பிரதமர் ஆகும் ஆசை எனக்கு இல்லை: சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்

‘‘பிரதமர் ஆகும் ஆசை எனக்கு இல்லை’’ என ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

தெலுங்கு தேச கட்சியின் மாநில மாநாடு விஜயவாடாவில் நடக்க உள்ளது. இதில் கட்சி சார்பில் 36 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில், 4 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் முழுவதும், மாவட்ட அளவிலான மினி மாநாடு, அந்தந்த மாவட்ட தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம் சார்பில், ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் வியாழக்கிழமை பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஹைதராபாத் நகரில் தகவல் தொழில் நுட்பத்தை வளர்த்தது என்னுடைய ஆட்சியில்தான். தற்போது, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. மும்பை, டெல்லி நகரங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிட்டு புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர நினைக்கிறது. ஒரு சிலை நிறுவ ரூ.2,500 கோடி செலவு செய்ய தீர்மானித்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களின் வளர்ச்சியில், அலட்சிய போக்கோடு நடந்து கொள்கிறது. பண மதிப்பிழப்பு திட்டத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது நான்தான். ஆனால், தற்போது, நாட்டில் கருப்பு பணம் மீட்கப்படவில்லை. இதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

முத்தலாக் திட்டத்தையும் அமல்படுத்த எங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக கடந்த 4 ஆண்டுகளாக பொறுத்திருந்தேன். ஆனால், நாங்கள் பாஜகவால் வஞ்சிக்கப்பட்டோம். கர்நாடக தேர்தலில் பாஜகவின் சூழ்ச்சி பலிக்கவில்லை. பாஜகவின் வீழ்ச்சி கர்நாடகாவில் தொடங்கிஉள்ளது. இது இனி தெலங்கானா, ஆந்திரா என எதிரொலிக்கும். மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் சிலர் ‘வருங்கால பிரதமர் வாழ்க’ என கோஷமிட்டனர். அதற்கு, ‘‘எனக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லை’’ என சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாகக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x