Last Updated : 26 May, 2018 08:12 AM

 

Published : 26 May 2018 08:12 AM
Last Updated : 26 May 2018 08:12 AM

குமாரசாமியை எப்படி புரிந்து கொள்வது?

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கியதற்காகவும், மாநில கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய‌தற்காகவும் எச்.டி. குமாரசாமி கொண்டாடப்படுகிறார். கன்னடத்தில் ஒருவிதமாகவும், தமிழில் இன்னொரு விதமாகவும், ஆங்கிலத்தில் வேறொரு விதமாகவும் அவர் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் க‌ட்சியின் பெயரில் இருக்கும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை மயக்கத்தில் சிலர் வரவேற்கிறார்கள். காங்கிரஸுடன் கைக்கோர்த்தற்காக சிலர் பாராட்டுகிறார்கள். பாஜக இல்லாத‌ தென்னிந்தியாவை நிறுவியதற்காக திராவிட பார்வையில் சிலர் நேசத்தோடு பார்க்கிறார்கள். தேசிய கட்சிகளைப் போல காவிரியை வைத்து அரசியல் செய்யாமல் தண்ணீர் கொடுப்பார் என சிலர் நட்பாக நினைக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, உண்மையில் குமாரசாமி கொண்டாடப்பட வேண்டியவாரா என்ற கேள்வி எழுகிறது.

மண்டல கட்சி

முதலில், முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை தேசிய கட்சியாக பதிவு செய்திருக்கிறார், குமாரசாமி அதை மாநில கட்சி என்கிறார். உண்மையில் அது மாநில கட்சி கூட இல்லை. வேண்டுமானால் ஒரு மண்டலக் கட்சி என சொல்லலாம்.

அடுத்து, ‘மதச்சார்பற்ற’ - என்ற வார்த்தைக்கும் அந்த கட்சிக்கும் ரொம்ப தூரம். தேவகவுடாவும், குமாரசாமியும் இன்றளவும் பூசாரியின் காலில் விழுந்து கும்பிடாமல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். தெய்வ பக்தியில் நிர்வாண பூஜை அளவுக்கு இறங்கிய எடியூரப்பாவைக் கூட மிஞ்சி விடுவார்கள்.

. காங்கிரஸுடன் மஜத கூட்டணி அமைத்திருப்பது ஆட்சியை பிடிப்பதற்காக மட்டுமே. கொள்கை ரீதியான கூட்டணி அல்ல. இதே காங்கிரஸுடன் 2004-ல் தேவகவுடா கூட்டணி அமைத்தார். காங்கிரஸ் தலைவர் தரம்சிங் முதல்வரானார். 2006-ல் தன் தந்தை அமைத்த கூட்டணியை முறித்து, மதச்சார்புள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்து முதல்வரானார் குமாரசாமி. ‘20 மாத முதல்வர்’ எனும் புதுவிதமான‌ ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தி தான் முதல்வராகவும், எடியூரப்பாவை துணை முதல்வராகவும் ஆக்கினார். 20 மாதங்கள் முடிந்த நிலையில், எடியூரப்பாவுக்கு ஆட்சியை கொடுக்காமல் ஏமாற்றினார். குமாரசாமி ஏமாற்றியதை ஊரெங்கும் சொல்லியே, அனுதாப ஓட்டில் முதல் முறையாக 2008-ல் முதல்வரானார் எடியூரப்பா. அந்த வகையில் தென்னிந்தியாவில் முதன் முதலாக பாஜக நுழைந்ததற்கு, கதவை திறந்தவர் குமாரசாமிதான்.

குமாரசாமிக்கு திராவிட பார்வையெல்லாம் ஒன்றும் கிடையாது. இயல்பில் அவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி கிடைக்காததால், பகுதி நேர அரசியல்வாதியாக மாறி போனார்.சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னட நாளிதழ் ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதியையும், தேவகவுடாவையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வெளிவந்தது. இருவரும் தனி ஆளாக‌ போராடி உச்சத்தை தொட்டு, அதில் கிடைத்த இடத்தை மகன், மருமகள், பேரன் என‌ குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுத்திருக்கின்றனர். இதனால் பெரியதாக வளர்ந்திருக்க வேண்டிய கட்சி, குடும்பத்துக்குள்ளே சுருங்கி போனது என தொட்டுக்காட்டப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுடன் ஒருமுறை மூன்றாம் அணியில் கூட்டணி, கருணாநிதியுடன் இந்த ஒப்பீடு இவை தான் மஜதவுக்கும் திராவிடத்துக்கும் இடையேயான தொடர்பு.

பின்னர் காவிரி, இந்த விவகாரத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு என்ன நிலைப்பாடோ அதே நிலைப்பாடு தான் குமாரசாமிக்கும். இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளும் இரு மாநிலங்களிலும் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் வளைந்து நெளிந்து போகும். ஆனால் குமாரசாமிக்கு அந்த அவசியம் இல்லை என்பதால், எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார். ‘ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு தர முடியாது’ என்ற வசனத்தை உச்சரிப்பார். இன்னும் சொல்லப்போனால் கர்நாடகாவில் மற்றவர்களைக் காட்டிலும், காவிரி நீரோடு அதிக தொடர்புடையவர் குமாரசாமிதான். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வாழும் ஒக்கலிகர்களே அந்த நீரை பெரும்பான்மையாக பயன்படுத்துகின்றனர். இதனால் குமாரசாமி, மண்டியா கவுடாக்களை பகைத்துக் கொண்டு தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டுக்கு எப்படி நீர் கொடுப்பார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x