Last Updated : 24 May, 2018 05:01 PM

 

Published : 24 May 2018 05:01 PM
Last Updated : 24 May 2018 05:01 PM

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 12 பேரை போலீஸார் சுட்டுக்கொன்ற விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு கள ஆய்வு நடத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்த மனுவை ஏ ராஜராஜன் என்பவரின் வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையால், அப்பகுதிச் சுற்றுச்சூழல் மாசுடுபடுகிறது, சுகாதாரக்கேடு உண்டாகிறது, அதை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினார்கள். கடந்த 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லும் போது, போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 12 பேர் இரக்கமின்றி, சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மிகவும் கவலையளிக்கக்கூடிய, மனித உரிமைகள் மீறப்பட்ட தீவிரமான இந்த விஷயத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிடாமல், தமிழக அரசிடமும், போலீஸ் டிஜிபியிடமும் மட்டும் அறிக்கை கேட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்பட்டு வேகமாகத் தலையிடாவிட்டால், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீஸார் மக்களைச் சுடும் சம்பவங்கள் தொடர்ந்துவிடும்.

ஆதலால், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களைக் கள ஆய்வு நடத்த வேண்டும், அல்லது, சார்பில்லாத அமைப்பு மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இதில் விரைந்து செயல்படாமல் இருந்தால்,போலீஸார் தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை எல்லாம் அழித்துவிடுவார்கள். ஆதலால், இதில் விரைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட உத்தரவிடவேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x