Last Updated : 23 May, 2018 03:25 PM

 

Published : 23 May 2018 03:25 PM
Last Updated : 23 May 2018 03:25 PM

‘ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும்’: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பொலிட் பீரோ) வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை, கழிவுநீரால் சுற்றுச்சூழல், நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதைக் கண்டித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அப்பகுதி மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தினார்கள்.

இதில் 100-வது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மக்களின் உடல் நலத்துக்கு எதிராகச் செயல்படும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பொலிட் பீரோ) வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 10 பேரை கொன்று இருக்கிறார்கள், அவர்களின் தலையிலும், முகத்திலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சுப்புகை, கழிவு நீர் போன்றவற்றால், நிலத்தடி நீர் மாசுபடுகிறது, அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் மக்களின் உடல்நலத்துக்கும் கேடு ஏற்படுகிறது. இது குறித்து மாநில அரசிடம் பலமுறை கோரிக்கைவிடுத்தும் அவர்கள் போதுமான அளவு நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பொலிட் பீரோ) வலியுறுத்துகிறது. அந்த ஆலையை மூடுவது தொடர்பாக ஆலை நிர்வாகத்தினர் தரப்பில் மாநில அரசு பேச்சு நடத்த வேண்டும்.

மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக, இரக்கமே இல்லாமல் போலீஸார்  நடத்திய துப்பாக்கிச் சூட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உயர் நீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெதகீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x