Last Updated : 23 May, 2018 01:28 PM

 

Published : 23 May 2018 01:28 PM
Last Updated : 23 May 2018 01:28 PM

‘பெட்ரோல் விலையில் ரூ.25 வரை குறைக்க முடியும்; மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் சாடல்

பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும், ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்யமாட்டார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

கர்நாடகத் தேர்தலுக்காக ஏப்ரல் 24 முதல் மே 14-ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 9 நாட்களாகத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 80 ஆகவும், டீசல் ரூ72 ஆகவும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குத் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா நேற்று கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைத்து மத்திய அரசும் கவலை கொண்டுள்ளது. விரைவில் எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி நல்ல முடிவு அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுத்தி வைத்த காரணத்தினால் தான் இந்தக் கடுமையான விலை ஏற்றம் என்று எண்ணெய் நிறுவனங்களை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை எண்ணெய் நிறுவனங்கள் மறுக்கின்றன. மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத் தேர்தலையொட்டி விலை உயர்வை நிறுத்தி வைக்கக் கோரி எந்தவிதமான அறிவுறுத்தலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையில் அதிகபட்சமாக 25 ரூபாய் வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பெட்ரோலில் லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறைக்க முடியும். ஆனால், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு செய்யமாட்டார்கள். பெட்ரோலில் லிட்டருக்கு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் என பெயரளவுக்கு குறைத்து, மத்திய அரசு மக்களை ஏமாற்றும்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 15 ரூபாய் வரை மத்திய அரசு சேமித்தது. அதன் மீது கூடுதலாக 10 ரூபாய் வரிவிதித்து மக்களுக்கு விற்பனை செய்து மத்திய அரசு லாபம் சம்பாதித்து வருகிறது.

இப்போது அதைக் குறைக்கலாமே. இப்போது மத்திய அரசுக்கு பெட்ரோல் விற்பனையின் மூலம், லிட்டருக்கு 25 ரூபாய் கிடைத்து செல்வச்செழிப்போடு இருக்கிறது. உண்மையில் இந்தப்பணம் அனைத்தும் சாமானிய மக்களுக்கும், சராசரி நுகர்வோர்களுக்கும் சென்று சேர வேண்டிய பணமாகும்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x