Published : 23 May 2018 11:43 AM
Last Updated : 23 May 2018 11:43 AM

மாட்டுக்கறி பிரச்சினையில் பாடம் கற்ற பாஜக அரசு: கடும் எதிர்ப்பால் சைவ உணவு திட்டத்தை நிறுத்திய ரயில்வே

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ரயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்குவது என்ற திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அதனை, ரயில்வே கைவிட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் 2019-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை வெகு விமர்சையாக கொண்டா விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வேயும், மகாத்மாவின் பிறந்தநாளை கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, அக்டோபர் 2-ம் தேதி அன்று, சபர்மதியில் இருந்து தூய்மை எக்ஸ்பிரஸ் (சுவாச்தா எக்ஸ்பிரஸ்) ரயில்களை காந்தியுடன் தொடர்புடைய பல்வேறு ரயில் நிலையங்களுக்கு இயக்கவும் முடிவு செய்துள்ளது.

மேலும், காந்தி சைவ உணவை வலியுறுத்தி வந்ததால் அவரது பிறந்த நாளில் ரயில்களில் சைவ உணவு மட்டும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டுமின்றி வரும் 2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளும், காந்தி ஜெயந்தியில் ரயில்களில் சைவ உணவை மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டது.

ரயில்வேயின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஜனநாயக நாட்டில் மக்களின் உணவு விஷயத்தில் அரசு தலையிடக்கூடாது என கோரிக்கைகள் எழுந்தன. சைவ உணவு திட்டத்திற்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்தன.

காந்தி ஜெயந்தி அன்று ரயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்கும் திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்கு ரயில்வே அனுப்பி வைத்தது. ஆனால் ரயில்வேயின் இந்த திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் பலரும், பலவித உணவுப் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு சைவ உணவு மட்டுமே வழங்கும் நடைமுறை சர்ச்சையை ஏற்படுத்தும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டுக்கறி விவகாரம் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மாட்டுக்கறி சாப்பிட்டவர்களை சிலர் தாக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுபோன்ற சர்ச்சை மீ்ண்டும் எழுவதை தடுக்கும் விதமாக ரயில்வேயின் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதை மிஸ் பண்ணாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x