Last Updated : 23 May, 2018 08:55 AM

 

Published : 23 May 2018 08:55 AM
Last Updated : 23 May 2018 08:55 AM

நிபா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு உதவி; உயிர்த் தியாகம் செய்த கேரள நர்ஸ் லினி: குடும்பத்துக்கு கடைசியாக எழுதிய கடிதத்தில் உருக்கம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெரம்பரா மருத்துவமனையிலும் வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் சிலர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய சிகிச்சைக்கு லினி (31) என்ற நர்ஸ் உதவி செய்து வந்தார். ஆனால், அதே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு கூட அவர் தான் பெற்ற குழந்தைகளை, கணவன், குடும்பத்தினரை பார்க்காமல் உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். இது எல்லோரின் இதயத்தையும் கனமாக்கி உள்ளது.

மற்றவர்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது என்பதால், லினியின் உடலைக் கூட அவரது குடும்பத்தினரிடம் கொடுக்கவில்லை. கேரள சுகாதாரத் துறையினரே தகனம் செய்து விட்டனர். அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கண்ணீருடன் பங்கேற்றனர்.

லினியின் தாய் மாமா வி.பாலன் கூறும்போது, ‘‘தான் இறக்கப்போகிறோம் என்பதை லினி அறிந்து கொண்டார். மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே வாழ்ந்தார். அவரது மர ணம் ஒரு தியாகம்தான்’’ என்று கண்ணீர்மல்க தெரிவித் தார்.

லினிக்கு சித்தார்த் (5), ரிதுல் (2) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சஜீஸ் பக்ரைனில் வேலை செய்கிறார். லினி கவலைக்கிடமாக இருக் கும் தகவல் அறிந்து 2 நாட்களுக்கு முன்னர்தான் கேரளாவுக்கு வந்துள்ளார். ஆனால், கணவர், பெற்ற குழந்தைகளைக் கூட அவர் பார்க்கவில்லை. குழந்தைகளும் தாய்க்கு கடைசி முத்தம் கூட கொடுக்க முடியாமல் போனது.

லினியின் மறைவுக்கு கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் கடைசியாக தனது கணவருக்கு லினி எழுதிய கடிதத்தை பேஸ்புக்கில் சுரேந்திரன் பகிர்ந் துள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘‘சாஜி சேட்டா.. எனது முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நமது குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். அவர்களை உங்களுடன் வளைகுடாவுக்கு அழைத்து சென்றுவிடுங்கள். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்க வேண்டாம். அன்புடன் லினி’’ என்று எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியுள்ளது. சேவை மனப்பான்மையுடன் பணிபுரிந்த லினியின் மரணம், அவரது கடிதம் எல்லோரையும் கண்கலங்க வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x