Published : 21 May 2018 06:00 PM
Last Updated : 21 May 2018 06:00 PM

குஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொழிற்பேட்டை பகுதி ஒன்றில் தலித் வாலிபரை கட்டி வைத்து அடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.

ராஜ்கோட்டைச் சேர்ந்த ரதாதியா இண்டஸ்ட்ரீஸைச் சேர்ந்த 5 பணியாளர்கள் முகேஷ் வானியா என்ற குப்பையகற்றும் துப்புரவுப் பணி செய்து வரும் தலித் வகுப்பைச் சேர்ந்த வாலிபரை சுவற்றில் வரும் பைப்பில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலை உரிமையாளர் உட்பட 5 பேரை இது தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் இன்னும் குற்றவாளிகளின் அடையாளங்களை போலீஸ் தரப்பு இன்னமும் வெளியிடவில்லை.

கொலையுண்ட நபர் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அவர் ஒரு குப்பை அகற்றுபவர், அந்தத் தொழிற்பேட்டையில் இவர், இவரது மனைவி ஜெயா, இவரது அத்தை ஆகியோர் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவருடன் தொழிற்சாலை பணியாளர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டை தொழிலாளர்கள் சுமத்தினர். இதனையடுத்து தொழிற்சாலைக்குள் இவரை இழுத்துச் சென்று சுவற்றில் வரும் பைப்பில் கட்டிப் போட்டு தடி மற்றும் பெல்ட்களினால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து இவர் ராஜ்கோட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது.

இந்த படுகொலை வீடியோவை தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி தன் சமூகவலைத்தள பக்கத்தில் ‘GujaratIsNotSafe4Dalit’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டுள்ளார். மேலும் தன் ட்வீட்டில், “முகேஷ் வானியா என்ற நபர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் இவரை தொழிற்சாலை முதலாளிகள் அடித்துக் கொன்றனர். இவர் மனைவி ஜெயாவையும் கண்மூடித்தனமாக அடித்துக் காயப்படுத்தியுள்ளனர்” என்று ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x