Published : 21 May 2018 07:43 AM
Last Updated : 21 May 2018 07:43 AM

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை; அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது குறித்து பேச்சு

கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மதச்சார்பற்ற ஜன தாதள மாநில தலைவர் எச்.டி. குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி யின் மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேச உள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - பகுஜன் சமாஜ் கூட்டணி 38, மற்றவை 2 இடங்களில் வெற்றி பெற்றன. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை (112 இடங்கள்) கிடைக்கவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பாஜகவின் எடியூரப்பா ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக மஜத தலைமையில் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆத ரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து மஜத மாநில தலைவர் குமாரசாமி ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினார்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவும் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ், மஜத கட்சிகள் 16-ம் தேதி நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் முறை யீடு செய்தன.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுத்தது. எனினும், முதல்வர் பதவி நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதுதான் என தெரிவித்தது. இதையடுத்து 17-ம் தேதி எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் இந்த வழக்கை 18-ம் தேதி விசாரித்த நீதிபதிகள், 19-ம் தேதி நம்பிக்கை வாக்கு கோருமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.

இதன்படி, நேற்று முன்தினம் சட்டப்பேரவை கூடியது. தற்கா லிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ போபையா புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் தனக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவை பெற்றுள்ள மஜத மாநில தலைவர் குமாரசாமியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இவருக்கு சுயேச்சை கள் உட்பட 117 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. முதலில் பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினம் என்பதால், பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனி யாகாந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க முடியாமல் போகும். எனவே, வரும் 23-ம் தேதி கன்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என குமாரசாமி தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட மாநில கட்சித் தலைவர்களுக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த விழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் 3-வது மகனான குமாரசாமி 2-வது முறையாக கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸும் மஜதவும் கூட்டணி அரசை அமைத்தன. காங்கிரஸ் கட்சியின் தரம் சிங் முதல்வரானார். ஆனால் பதவியேற்ற 2 ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் கடந்த 2006-ல் பாஜக-மஜத இடையே கூட்டணி ஏற்பட்டது. இதில் குமாரசாமி முதல்வரானார். அப்போது சுமார் 20 மாதங்கள் இப்பதவியில் நீடித்தார். பின்னர் ஒப்பந்தப்படி முதல்வர் பதவியை விட்டுத் தராததால் பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது.

24 மணி நேரத்தில் நிரூபிப்பேன்

இந்நிலையில், குமாரசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “திங்கள்கிழமை காலையில் டெல்லிக்கு செல்கிறேன். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அதன் பிறகு எந்தக் கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவி வழங்குவது, யாரை அமைச்சரவையில் சேர்ப் பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். முதல்வராக பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பேன்” என்றார்.

சுழற்சி முறை இல்லை

கடந்த காலத்தைப் போல, மஜதவும் காங்கிரஸும் தலா 30 மாதங்களுக்கு சுழற்சி முறையில் முதல் வர் பதவியை வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது குறித்த கேள்விக்கு, “முதல்வர் பதவியை சுழற்சி முறையில் மாற்றிக்கொள் வது குறித்து இதுவரை எந்த உடன்பாடும் செய்துகொள்ளப்படவில்லை. இதுதொடர்பான ஊகங்களை வெளியிட்டு, ஊடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. கூட்டணி அரசுக்கான பொது செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக, ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது குறித்து இரு கட்சியின் மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என குமாரசாமி பதில் அளித்தார்.

இதனிடையே, குமாரசாமி நேற்று தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள மஜத எம்எல்ஏக்களையும் சந்தித்தார்.

காங்கிரஸு க்கு துணை முதல்வர்

அமைச்சர் பதவிகளை பங்கிட் டுக் கொள்வது தொடர்பாகவும் இரு கட்சித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ் வர் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2015 முதல் 2017 வரை உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

இதுகுறித்து மஜத தேசிய செயலாளர் குன்வர் டேனிஷ் அலி கூறும்போது, “காங்கிரஸ், மஜத கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும். குறிப்பாக வரும் மக்களவைத் தேர்தலில் இக்கூட்டணி மேலும் வலுவடையும்” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “அமைச்சரவை குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக மஜதவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது” என்றார்.

ஸ்ரீரங்கம் கோயிலில்

குமாரசாமி வழிபாடு

(செய்தி உள்ளே)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x