Last Updated : 19 May, 2018 07:15 AM

 

Published : 19 May 2018 07:15 AM
Last Updated : 19 May 2018 07:15 AM

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா வெற்றி பெறுவாரா?; பாஜக மீது எதிர்க்கட்சிகள் புகார்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக (104), காங்கிரஸ் (78), மஜத (38), மற்றவை (2) என எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை (112) கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், மஜதவுக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து மஜத மாநில தலைவர் குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதே போல தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவும் ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கடிதம் அளித்தார்.

இதையடுத்து ஆளுநர் கடந்த புதன்கிழமை இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனிடையே காங்கிரஸை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவில் முறையிட்டார். எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்பதற்கு தடை விதிக்கக் கோரினார். அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா ஆளுநரிடம் அளித்த கடிதத்தின் நகலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. எடியூரப்பா நேற்று முன் தினம் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்பதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஆளுநருக்கு எடியூரப்பா அளித்த கடிதங்களின் நகல்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து பாஜக வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், '' பாஜகவுக்கு தனிபெரும்பான்மை நிரூபிக்க தேவையான எம் எல் ஏக்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ், மஜத, சுயேச்சைகள் கூட பாஜகவுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இருக்கிறது. தேவைப்படும் போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை'' என்றார்.

அதற்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி, '' எடியூரப்பா ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் ஆதரவு எம் எல் ஏக்களின் பெயரும், கையெழுத்தும் இல்லை. எதன் அடிப்படையில் ஆளுநர் அவருக்கு தனிபெரும்பான்மை இருக்கிறது என அழைத்தார். காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது என கடிதம் அளித்தபோது அழைக்காத அவர், ஏன் பாஜகவை மட்டும் அழைத்தார். எனவே கர்நாடக சட்டப்பேரவையை கூட்டி சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்த முடியுமா? பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா?''என கேட்டார்.

அதற்கு பாஜக வழக்கறிஞர், ''எம் எல் ஏக்கள் சிலர் ஆந்திராவிலும், சிலர் கேரளாவிலும் இருப்பதாக தெரிகிறது. அதனால் ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும். நாங்கள் அப்போது பெரும்பான்மையை நிரூபிக்கிறோம்’’என்றார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ''சனிக்கிழமை 4 மணிக்கு அவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கு முன்னதாக அவர் எத்தகைய கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது. இதற்காக தற்காலிக சட்டப்பேரவை தலைவரை நியமிக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தாமல், வெளிப்படையாக கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில் அனைத்து எம் எல் ஏக்களும் கலந்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை கேமராவில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக காவல்துறை தலைவர் ஏற்பாடு செய்ய வேண்டும்''என உத்தரவிட்டார்.

இது குறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், '' உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். உடனடியாக தலைமைச் செயலாளருடன் கலந்துபேசி, சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான அலுவல்கள் தொடங்குகிறேன். இதில் நான் வெற்றி பெற்று, 5 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்வேன். என்னை வெளியே இருந்து ஆதரிக்க நிறைய எம் எல் ஏக்கள் உள்ளனர்''என்றார். இதற்கிடையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x