Published : 18 May 2018 02:32 PM
Last Updated : 18 May 2018 02:32 PM

‘‘சட்டபூர்வமாக தடுத்துவிட்டோம்; பணத்தால் வீழ்த்த பார்ப்பார்கள்’’ - பாஜக மீது ராகுல் விளாசல்

கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் மூலம் ஆளுநர் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது, பாஜகவின் சதித்திட்டத்தை சட்டபூர்வமாக தடுத்துள்ளோம், ஆனாலும் பணம் மற்றும் பலத்தை பாஜக அங்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதை தொடர்ந்து, கர்நாடக முதல்வராக எடியூரப்பாவிற்கு, ஆளுநர் வாஜ்பாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக முதல்வராக எடியூரப்பா சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆளுநர் வாஜுபாய் வாலா 15 நாட்கள் காலஅவகாசம் அளித்த நிலையில், உச்ச நீதிமன்றம் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்புநடத்த உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

‘‘உச்ச நீதிமன்றம் இன்று, கர்நாடக ஆளுநர் வாஜ்பாய் வாலா, அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்ற எங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. எண்ணிக்கை இல்லாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக தடுத்துவிட்டோம். இனிமேல் அவர்கள் பணம் மற்றும் பலத்தை பிரயோகிப்பார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவை வளைக்கப் பார்ப்பார்கள்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x