Published : 18 May 2018 07:59 AM
Last Updated : 18 May 2018 07:59 AM

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸால் எதிர்க்க முடியாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து

‘‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் கட்சியால் எதிர்கொள்ள முடியாது என்பதை கர்நாடக தேர்தல் முடிவுகள் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற அதிகாரப்பூர்வ இதழில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும்தான் (யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத் தவிர்த்து) காங்கிரஸ் ஆட்சி இருந்தது. இப்போது அங்கும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதையே கர்நாடக தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோயில்களுக்கும் மடங்களுக்கும் சென்று வந்தது எடுபடவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் இருந்து இடதுசாரி கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் தெளிவான ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

கர்நாடக தேர்தலில் சாதகமான ஒரு விஷயம் என்னவென்றால், முடிவுகள் வெளியான உடனே தாமதிக்காமல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததுதான்.

ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், முதல்வர் பதவியேற்க எடியூரப்பாவை ஆளுநர் அழைத்தது கண்டிக்கத்தக்கது. பாஜக.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், தேர்தலுக்கு பின்பு மஜத - காங்கிரஸ் கூட்டணியில் பெரும்பான்மை பலம் இருப்பது தெரிந்தால் அவர்களைத்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு மக்கள் ஜனநாயகம் இதழ் தலையங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x