Last Updated : 17 May, 2018 08:04 PM

 

Published : 17 May 2018 08:04 PM
Last Updated : 17 May 2018 08:04 PM

காவிரி விவகாரம்: மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரம்: நாளை இறுதி உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 4 மாநிலங்களும் நீரைச் சுமுகமாக பிரித்து வழங்குவதற்காக அமைக்கப்படக் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தனது இறுதி உத்தரவை நாளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் இறுதித்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வரைவு செயல்திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார்.

அந்த வரைவு செயல்திட்ட அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 9 பேர் கொண்ட அந்தக் குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

ஆனால், குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற அம்சத்தைத் திருத்த வேண்டும் என மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திசூட் ஆகியோர் முன் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் எனப் பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிடுகையில், கர்நாடக மாநில அரசின் ஆலோசனைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அளித்த உத்தரவில், அணைகளுக்கு போதுமான நீர்வரத்துவரும் வரை, தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் குறைந்தபட்ச நீரை வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், வரைவு செயல்திட்ட அறிக்கையில் குறிப்பிடவில்லை. மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகாபால், நீர் பகிர்மானம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் செய்யக்கோரிய அனைத்துத் திருத்தங்களும் செய்யப்பட்டுவிட்டன எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், 4 மாநில அரசுகளும் அளித்த ஆலோசனைகள் ஆய்வு செய்யப்பட்டு நாளை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அல்லது இம்மாதம் 22 அல்லது 22-ம் தேதி இறுதி உத்தரவு பிறப்பக்கடும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x