Published : 17 May 2018 03:14 PM
Last Updated : 17 May 2018 03:14 PM

முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடக்கம்: ஆண்டுக்கு ஒரு பிரதமர் அறிமுகம், பெண்கள் மட்டுமே போட்டி

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஊழலுக்கு எதிரான செயலியக்கக் கட்சி(ஆன்ட்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி) எனப் பெயரிட்டுள்ளார்.

வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த கர்ணன் மூத்த நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். இந்தக் குற்றச்சாட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்த கர்ணன், கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனைப் பெற்று, கடந்த 5 மாதங்களுக்கு முன் விடுதலையானார்.

இந்நிலையில், “ஆன்ட்டி கரப்ஷன் டைனமிக் பார்டி” (‘Anti-Corruption Dynamic Party) அதாவது ஊழலுக்கு எதிரான செயலியக்கக் கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகக் கர்ணன் தெரிவித்துள்ளார். இந்தக் கட்சியின் அங்கீகாரத்துக்காகத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துக் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நீதிபதி கர்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக, “ஆன்ட்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி” எனும் கட்சியை தொ டங்கி இருக்கிறேன். எங்கள் கட்சியில் பெண்கள் மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதால், தேர்தலில் நாடுமுழுவதும் பெரும்பாலான இடங்களைப் பெறுவோம் என நம்புகிறோம். வாரணாசியில் கூட பெண்கள்தான் போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.

பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு ஏன் கொடுக்கப்படுகிறது என்றால், இன்று பாலினம் அடிப்படையில் பல்வேறு பாகுபாடுகளைப் பெண்கள் சந்தித்து வருகின்றனர், பெண்களுக்கும், சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிராக பல்வேறு பாகுபாடு நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. அவர்களை முன்னேற்றவே இந்த திட்டமாகும்.

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆண்டுதோறும் ஒரு புதிய பிரதமர் பொறுப்பேற்பார். 2019-20ம் ஆண்டில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரதமராவார். அடுத்த ஆண்டு உயர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் பிரதமராகத் தேர்வுசெய்யப்படுவார்.அடுத்தடுத்த ஆண்டுகளில் பிற்படுத்த வகுப்பு உள்ளிட்ட சாதி, மதங்களைச் சேர்ந்த பெண்கள் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்கள்.

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தலித்களுக்கு எதிராகவும் தாக்குதல்கள், கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இது சர்வதேச சமூகத்தின்பார்வையில் மிகமோசமாக பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருந்து கொண்டு, அம்பேத்கரின் அரசியலமைப்பின் தந்தையாக வைத்துக்கொண்டு, தலித், சிறுபான்மையினரைப் பாதுகாக்க தவறுகிறோம். உயர்சாதியைச் தேர்ந்த மக்கள், தலித் சமூகத்தின் உரிமைகளைப் பறித்து வருகிறார்கள். இது நாட்டின் ஒழுக்க நெறி, அரசியலமைப்பு மரபுகளுக்கு எதிரானதாகும்.

மேலும், பல்வேறு சிறைகளில் தலித் தலைவர்கள் எந்தவிதான குற்றமும் நிரூபிக்கப்படாமல் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு கர்ணன் தெரிவித்தார்.

 

இதைப்படிக்க மறந்துடாதீங்க....

டாஸ் போடும் முறையை ஒழித்துக் கட்ட ஐசிசி முடிவு? தீவிர பரிசீலனை

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x