Last Updated : 17 May, 2018 08:00 AM

 

Published : 17 May 2018 08:00 AM
Last Updated : 17 May 2018 08:00 AM

கர்நாடக மாநிலத்தில் வீசிய பிரதமர் நரேந்திர மோடி புயல்

தே

ர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி யாருமே எதிர்பார்க்காத வகையில் கர்நாடகாவில் பாஜக முதலிடம் பிடித்திருக்கிறது. இந்தியாவே எதிர்பார்த்த இந்த தேர்தலில் பலமான காங்கிரஸ், மஜத ஆகியவற்றை பாஜக வீழ்த்தியது அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த தேர்தலில் 40 இடங்களை மட்டுமே பிடித்த பாஜக, ஒரே பாய்ச்சலில் 104 இடங்களை பிடித்த‌து அக்கட்சியினருக்கே பெரிய ஷாக்!

மே மாதத்தில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் இந்த விஸ்வரூப வெற்றிக்கும் ‘MAY’ தான் காரணம். இதில் M என்றால் - மோடி, A என்றால் - அமித் ஷா, Y என்றால்- எடியூரப்பா!

கர்நாடக தேர்தல் முடிவை கடைசி நேரத்தில் திருத்தி எழுதியவர் பிரதமர் நரேந்திர மோடி. தோல்வியின் திசையின் பயணித்த ஆட்டத்தின் போக்கை கடைசி கட்டத்தில் மாற்றியவர். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள், விமர்சன பார்வைகள் அனைத்தையும் தனது வசீகரப் பேச்சால் அடித்து நொறுக்கி இருக்கிறார்.

கர்நாடகாவுக்கு மே 1-ம் தேதி மோடி வருவதற்கு முன் அமித் ஷா, எடியூரப்பா, யோகி ஆதித்ய நாத் பங்கேற்ற கூட்டங்கள் வெறிச்சோடின. ‘மோடி தான் எங்கள் தோனி.. கடைசி ஓவரிலும் இறங்கி வெளுப்பார்’ என பாஜகவினர் சொன்ன மாதிரியே நடந்திருக்கிறது.

“காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அதற்கு மோடி அலை தேவை இல்லை.மோடி புயல் தேவை” என முழங்கிய மோடி, ராகுல் காந்தியையும் சித்தராமையாவையும் விளாசினார். எதிர்க்கட்சியினர் சொன்ன எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் வாய் திறக்காவிட்டாலும், கூட்டம் குவிந்தது. மங்களூருவிலும், ஹூப்ளியிலும் திரும்பிய திசையெல்லாம் காவிக் கொடியே பறந்தது. எதிர்க்கட்சியினர் மோடியின் பலத்தை உணராமல், பேசியதையே பேசிக் கொண்டிருந்தனர். “அவர்கள் பேசுவார்கள். நாங்கள் செய்து காட்டுவோம்” என பன்ச் வசனம் பேசினார் மோடி. கடைசி 6 நாட்களில் மட்டும் 25 மாவட்டங்களில் 25 கூட்டங்களில் பேசினார். இடையிடையே விவசாயிகள், பெண்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் முனைவோர் என பல தரப்பினரிடமும் ‘நமோ’ ஆப் மூலம் கலந்துரையாடினார்.

“தலித்துகளுக்கு காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை. மல்லிகார்ஜுன கார்கே தலித் என்பதால் முதல்வராக ஆக்கவில்லை. பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. ஆனால் பாஜக தலித் ஒருவரை குடியரசுத் தலைவராக நியமித்திருக்கிறது. டீ விற்ற ஏழைத்தாயின் மகனான என்னை பிரதமராக ஆக்கி இருக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் தலித் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இங்கு நல்லாட்சி அமைய நான் கேரண்டி. எனக்காக வாக்களியுங்கள்” என மோடி சென்டிமெண்ட்டாக பேசினார். இதன் விளைவாக தலித்துகள், இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும்பாலான இடங்கள் கிடைத்தன.

கர்நாடகாவில் முதல் ஆளாக 2017-ம் ஆண்டே தேர்தல் வேலையை தொடங்கினார் அமித் ஷா. அங்கு ஒரு வாரம் முகாமிட்ட அவர் நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த எடியூரப்பா, ஈஸ்வரப்பா பிரச்சினைக்கு முதலில் முடிவு கட்டினார். எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்த போது, ‘ஊழல் வழக்கில் சிறைக்கு போன இவரை ஏன் அறிவிக்கிறார்?’ என கட்சிக்குள்ளே எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஆனால் அமித் ஷா லிங்காயத்து வாக்குகளை குறி வைத்து எடியூரப்பாவை முன்னிறுத்தினார். இந்த காய் நகர்த்தலால்தான், சித்தராமையாவின் லிங்காயத்து மத அங்கீகார விவகாரத்தை ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறது.

பாஜகவின் அத்தனை பிரிவு தலைவர்களையும் சந்தித்து பேசி, பிரிந்திருந்த ரெட்டி சகோதரர்களையும், மோதிக் கொண்டிருந்த மூத்த தலைவர்களையும் ஒழுங்காக கட்சிப் பணி செய்ய வைத்தார். ‘ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாஜக வென்றால் தான், அந்த‌ தொகுதியை கைப்பற்ற முடியும். ஒவ்வொரு தொகுதியையும் வென்றால்தான் ஆட்சியை பிடிக்க முடியும்’ என வெற்றி சூத்திரம் சொல்லிக்கொடுத்தார் அமித் ஷா.

கடந்த நவம்பர் 2-ம் தேதி தொடங்கிய‌ ‘மாற்றத்துக்கான யாத்திரை’ மூலம் மாநிலம் முழுவதும் சுழன்ற அவர், மடாதிபதிகள், கோயில் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்.

தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பெங்களூருவில் குடியேறிய அமித் ஷா வேட்பாளர் தேர்வில் கவனம் காட்டினார். எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கும், ஆதரவாளர் ஷோபா கரந்தலாஜேவுக்கும் சீட் தராமல் எடியூரப்பாவின் கவனத்தை சிதறடிக்காமல் பார்த்துக் கொண்டார். ஒருவேளை இருவருக்கும் சீட் கொடுத்திருந்தால், இப்போது சித்தராமையாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை எடியூரப்பாவுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆரம்பத்தில், ‘75 வயதான எடியூரப்பா எப்படி இளைஞர்களை கவரப் போகிறார்?’ என பாஜகவினரே புருவத்தை உயர்த்தினர். ஆனால் எதற்கும் கவலைப்படாமல் மோடி, அமித் ஷா சொன்னதை செய்தார் எடியூரப்பா. ஓராண்டுக்கு முன்பே வறட்சி நிவாரண யாத்திரையை தொடங்கி 224 தொகுதிகளிலும் வேலையை தொடங்கினார். தனது ஆதரவாளர்களுக்கும், லிங்காயத்துகளுக்கும் பொறுப்புகளை வாரி வழங்கினார். ‘இதுதான் எனது கடைசி தேர்தல். லிங்காயத் ஒருவர் தான் கர்நாடகாவை ஆள வேண்டும். அதற்காக இரவு பகல் பாராமல் வேலை செய்யுங்கள்’ என உருக்கமாக பேசினார்.

மகனுக்கும், ஆதரவாளருக்கும் சீட் கொடுக்காத போதும், காரியத்தில் கண்ணாக இருந்தார். லிங்காயத் மடங்களுக்கு சென்று ஆதரவு அளிக்க உருக்கமாக மன்றாடினார். இதனால் சித்தராமையாவின் லிங்காயத் மத அரசியலை தவிடு பொடியாக்கினார். லிங்காயத்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் 40 இடங்களில் வென்று, அந்த மக்களின் தனிப்பெரும் தலைவர் தான் மட்டும்தான் என்பதை நிரூபித்துள்ளார் எடியூரப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x