Published : 17 May 2018 07:59 AM
Last Updated : 17 May 2018 07:59 AM

1996-ல் தேவகவுடா ஆட்சியில் குஜராத் பாஜக ஆட்சிக் கலைப்பு: 22 ஆண்டுக்குப் பிறகு விதி விளையாடியது

குஜராத்தில் கடந்த 1995-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சுரேஷ் மேத்தா முதல்வராகப் பதவி வகித்தார். ஓராண்டுக்குப் பிறகு 1996 செப்டம்பரில் முதல்வர் சுரேஷ் மேத்தாவுக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா போர்க்கொடி உயர்த்தினார்.

அப்போது சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சுரேஷ் மேத்தா வெற்றி பெற்றார். எனினும் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அன்றைய ஆளுநர் கிருஷ்ணபால் சிங் (காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்) பரிந்துரையின்பேரில் குஜராத் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அரசை கலைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது மத்தியில் பிரதமராக இருந்தவர் தேவ கவுடா. அவரது பரிந்துரையின் பேரிலேயே அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா குஜராத் அரசைக் கலைத்தார். அந்த நேரத்தில் குஜராத் மாநில பாஜக தலைவராக இருந்தவர் வஜுபாய் வாலா.

தற்போது வஜுபாய் வாலா கர்நாடக ஆளுநராக உள்ளார். அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் பெரும்பான்மையை எட்டவில்லை. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் புதிய கூட்டணி அமைத்தன.

ஆட்சி அமைக்க உரிமைக் கோரி தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணியும், பாஜகவும் ஆளுநரிடம் கடிதம் அளித்தன. இதில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு விதி விளையாடியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x