Published : 17 May 2018 07:58 AM
Last Updated : 17 May 2018 07:58 AM

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும்? ட்விட்டரில் ஜேட்லி வெளியிட்ட கருத்துகளை ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் காங்கிரஸ்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்ற விஷயத்தில், அருண் ஜேட்லி ட்விட்டரில் ஏற்கெனவே கூறியிருந்த கருத்துகளை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது காங்கிரஸ்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பாஜக 104 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த இரு கட்சிகளும் (78+38 = 116) கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளன. ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே, ஆட்சி அமைக்க தன்னை அழைக்க வேண்டும் என்று மஜத கட்சி தலைவர் குமாரசாமி, ஆளுநரிடம் கடிதம் வழங்கி உள்ளார். பாஜக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டு ஷிகாரிபுரா தொகுதியில் வெற்றி பெற்ற எடியூரப்பாவும், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் வழங்கி உள்ளார். அதில், ‘‘தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பாஜக.வைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மணிப்பூர், கோவா, மேகாலயா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை மேற்கொள் காட்டி காங்கிரஸ் கட்சி பாஜக.வுக்கு நெருக்கடி அளித்து வருகிறது. மணிப்பூர், கோவா மாநில தேர்தல்களில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், உதிரி கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக அந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. இதனால் உஷாரான காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே மஜத.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துவிட் டது.

இந்நிலையில், ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 2017-ம் ஆண்டு ட்விட்டரில் கருத்துகள் தெரிவித்துள்ளார். அதில், ‘‘மாநில தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், தேவையான பலம் உள்ள கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கும் சட்டபூர்வமான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது’’ என்று ஜேட்லி தெரிவித்துள்ளார்.

அந்தக் கருத்தை காங்கிரஸ் தலைவர்கள், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா உட்பட தலைவர்கள் பலரும் மேற்கோள் காட்டி, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மஜத - காங்கிரஸ் கூட்டணியைத்தான் ஆளுநர் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x