Published : 16 May 2018 10:08 PM
Last Updated : 16 May 2018 10:08 PM

ஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 78, பாஜக 104, மஜத 38, சுயேச்சைகள் 2 ஆகிய இடங்களை பிடித்தன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டன. இதில் தலைவராக மஜத மாநில தலைவர் குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இரு சுயேச்சை உறுப்பினர்களும் மஜதவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து குமாரசாமி நேற்று ஆளுநரை சந்தித்து காங்கிரஸ், மஜத கூட்டணி சார்பாக தன்னை முதல்வராக பதவியேற்க அழைக்குமாறு கடிதம் அளித்தார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா வியாழக்கிழமை ஆளுநர் மாளிகையில் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் கசிந்தது. இதையடுத்து குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் ஆகியோர் ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கின‌ர்.

ஆளுநரின் இந்த அழைப்பை தொடர்ந்து கர்நாடக தலைமை செயலர் தலைமையில் முதல்வர் பதவி பிரமாண விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார்.

ஆளுநரின் அழைப்பால் கர்நாடகாவில் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து மஜத, காங்கிரஸ் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x