Last Updated : 16 May, 2018 06:53 PM

 

Published : 16 May 2018 06:53 PM
Last Updated : 16 May 2018 06:53 PM

சூடேறும் கர்நாடக அரசியல் களம்: நீதிமன்றத்தை நாடுவோம்; குமாரசாமி எச்சரிக்கை; என்ன முடிவெடுக்கப்போகிறார் ஆளுநர்?

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கக் அனுமதிக்கக் கோரி ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்திக்க மாளிகை முன் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) எம்எல்ஏக்கள் திரண்டுள்ளனர்.

பெரும்பான்மை இல்லை

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக உருவானது. ஆனால், பாஜகவை ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கூடாத வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. இதனால், இரு கட்சிகளும் 118 எம்எல்ஏக்களுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

ஆட்சி அமைக்க உரிமை

காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர்.இதையடுத்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

இந்நிலையில் 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ்,ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல் இன்று காலை நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு 78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது, 12 பேரைக் காணவில்லை. அதேபோல, ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் 2 எம்எல்ஏக்களைக் காணவில்லை.

ஆளுநருடன் சந்திப்பு

busjpegஆளுநரைச்சந்திக்க சொகுசு பஸ்ஸில் அழைத்து வரப்பட்ட எம்எல்ஏக்கள்100 

இதற்கிடையே பாஜகவின் சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பாவும் ஆளுநர் வாஜுபாய்வாலாவை இன்று சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரி கடிதம் அளித்தார். ஆளுநர் உரிய முடிவை எடுப்பதாக அவரிடம் உறுதியளித்தார்.

இதனால், மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவியது, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்கும் குதிரைபேரமும் ஒருபக்கம் ரகசியமாக நடக்கத் தொடங்கியது.

ஆளுநர் மாளிகைமுன் கூடிய எம்ஏல்ஏக்கள்

ஆளுநர் வாஜுபாய் வாலா எந்த முடிவும் எடுக்காதநிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரைச் சந்திக்க முடிவு செய்தனர். இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகை நோக்கி மாலை சென்றனர்.

ஆனால், ஆளுநர் வாஜுபாய் வாலா அனைத்து எம்எல்ஏக்களையும் சந்திக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால், காங்கிரஸ் கட்சியின் 78 எம்எல்ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 37 எம்எல்ஏக்கள் கையொப்பம் இட்ட கடிதத்தைமட்டும் எடுத்துக்கொண்டு குமாரசாமி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்தனர். தான் ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும் படி ஆளுநரிடம் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை நாடுவோம்

ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேவந்த குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் பெரும்பான்மை இருக்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க விடாமல் பாஜக தடுக்கிறது. அதற்கு ஏற்றார்போல் ஆளுநரும் தாமதித்து வருகிறார். எங்களுக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறேன். அதேசமயம் தொடர்ந்து ஆளுநர் தாமதித்தால், நீதிமன்றத்தை நாடி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்து இருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

நம்பிக்கை

காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆளுநருடனான சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் கூறுகையில், ‘அரசியலமைப்புச்சட்டப்படி முடிவு எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். அவர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. நீதிக்கு விரோதமாக அவர் நடக்கமாட்டார் என நம்புகிறோம். எங்களிடம் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க கோரவில்லை, போதுமான எண்ணிக்கை இருக்கிறது. பாஜக ஆட்சி அமைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’ எனத் தெரிவித்தார்.

தர்ணா போராட்டம்

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்கள் அவைத் தலைவருமான குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இருந்தும் ஆளுநர் வாஜ்பாய்வாலா எங்களை ஆட்சி அமைக்க அனுமதிக்காவிட்டால், நாளை காலை, ஆளுநர் மாளிகை முன் அனைத்து எம்எல்ஏக்களும் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்தார்.

சொகுசு ஹோட்டல் ‘ரெடி’

hoteljpegசொகுசு ஹோட்டல்: கோப்புப்படம்100 

இதற்கிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக தங்கவைக்க பெங்களூருவில் சொகுசு ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது, எம்எல்ஏக்கள் பெங்களூரிவில் உள்ள ஈகிள்டன் கோல்ஃப் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அந்த சொகுசு ஹோட்லில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களையும் தங்கவைக்க காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x