Last Updated : 16 May, 2018 05:14 PM

 

Published : 16 May 2018 05:14 PM
Last Updated : 16 May 2018 05:14 PM

‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை

கர்நாடக சட்டசபையை விரைவாகக் கூட்டுங்கள், இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்று கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரித்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில்,. 104 இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்று நோக்கில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள். அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

இந்நிலையில் 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆதலால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ்,ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல் இன்று காலை நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு 78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 12 பேரைக் காணவில்லை. அதேபோல, ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் 2 எம்எல்ஏக்களைக் காணவில்லை.

இந்த சூழலில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான சந்தோஷ் ஹெக்டேவும் கர்நாடக நிலவரம் குறித்து ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு அறிவுறை கூறியுள்ளார் அவர் கூறியிருப்பிருப்பதாவது:

கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, இனிமேல்தான் ஏராளமான சம்பவங்கள் நடக்கும். இந்த சூழல் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஏனென்றால், அரசியலமைப்புச்சட்டத்துக்கு முரணாக பல வழிகள் பின்பற்றப்பட்டு, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அதற்காக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள்.

ஆதலால், கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா விரைவாக கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி, சம்பந்தப்பட்ட கட்சிகளை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும். அதுதான் குதிரை பேரம் நடைபெறாமல் தடுக்கும் வழியாகும்.

இதுபோன்ற குதிரைபேரம் நடத்தியதற்கு தற்போதைய பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சிறந்த உதாரணமாகும். எஸ்ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த வழிமுறைகளில், பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது, சட்டப்பேரவையில்தான் நடக்க வேண்டும், வெளியில் அல்ல. மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியை அழைத்து உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க வேண்டும்.

ஆனால், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த கதை வேறு. தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் இருந்து அந்த கட்சி பெரும்பான்மை நிரூபிக்க முடியும் என்றாலும்வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இப்போது ஆளுநர் கையில் தான் அனைத்து முடிவுகளும் இருக்கிறது. இதை சரியாக மேலாண்மை செய்யாவிட்டால், விளைவுகள் மிக, மிக மோசமாக இருக்கும். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் பெரும்பான்மையை நீருபிப்பதற்காக எந்த அடிமட்டத்துக்கும் செல்வார்கள். அதன்பின் நீங்கள் எப்படி அரசியல் ஒழுக்கத்தையும், மற்ற விஷயங்களையும் பேச முடியும். இதுபோன்ற சம்பவங்கள் கர்நாடக மாநிலத்துக்கு அசிங்கமான விஷயம், என்னால் இந்த அளவுக்கு மேல் பேச முடியாது.

இதுபோன்ற விஷயங்களை மனதில்வைத்து, பெரும்பான்மை நிரூபிக்கும் விஷயத்தை காலம் தாழ்த்தாமல், குதிரைபேரத்துக்கு வழிவகுக்காமல் விரைவாக அவையை கூட்ட வேண்டும்

இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x