Published : 16 May 2018 03:57 PM
Last Updated : 16 May 2018 03:57 PM

அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு, மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே என்பதையும் ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இரு முறை அவகாசம் கேட்டநிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று முன்தினம் 14 பக்க வரைவு செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் 16-ம் தேதிக்குள் தங்களின் கருத்தை தெரிவிக்கவேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.

அதன்படி காவிரி வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராகி இருந்தார்.

கர்நாடகத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியான் திவான், கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடிந்திருப்பதால், அங்கு புதிய அரசு அமையாத சூழல் நிலவுகிறது, வரைவு செயல்திட்டம் குறித்து மற்ற மாநிலங்களைப் போல் நாங்களும் ஆலோசனை அளிக்க அளிக்கவேண்டும்.

மத்திய அரசுக்கு எதிராக இந்த வழக்கை நீங்கள் பலமுறை ஒத்திவைத்துள்ளீர்கள். இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கப் போகிறது. இதில் நாங்களும் ஆக்கப்பூர்வமாக கருத்து கூற உரிமை இருக்கிறது. ஆதலால் போதுமான அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஜூலை மாதம் முதல்வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது தமிழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் கூறுகையில், அரசியலமைப்புச்சட்டம் வெற்றிடத்தை விடுவதில்லை. கர்நாடகத்தில் அரசு செயல்படவில்லை, இல்லை என்று கூறுவது தவறு. ஜூலை மாதம்வரை நீதிமன்றம் காத்திருக்கக் கூடாது, ஜூன்மாதம் திட்டமிட காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையே கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள் வரைவு செயல் திட்டத்தில் திருத்தங்கள் செய்யக்கோரி ஆலோசனை அளித்திருந்தன. அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அதேசமயம், கர்நாடகத்தின் கோரிக்கையான ஜூலை மாதத்துக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

வரைவு செயல்திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் ஏற்பட்டால் இறுதிமுடிவு மத்திய அரசு எடுக்கும் என்ற அம்சத்தையும் ஏற்க முடியாது. மத்திய அரசின் முடிவுக்கே கட்டுப்பட வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இறுதித் தீர்ப்பின்படி காவிரி நிதிநீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புக்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது, இறுதிமுடிவும் காவிரி வாரியமே எடுக்க முடியும் மத்திய அரசுக்கு கிடையாது. நாங்கள் அளித்த தீர்ப்பை மத்திய அரசு நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்தியஅரசுக்கு இருந்தால், அதை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் என்று புதுச்சேரி அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி மிஸ்ரா, மத்திய அரசின் இந்த அம்சம் இறுதித்தீர்ப்புக்கு எதிரானதாகும் என்றனர்.

அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வேணுகோபால் பதில் அளிக்கையில், மத்திய அரசுக்கு இறுதி அதிகாரம் என்ற அம்சம் என்பது ஒரு பாதுகாப்பு வால்வு போன்றதாகும். காவிரி ஆணையத்தின் உத்தரவுக்கு பணியாவிட்டால், ஆணையம் மத்திய அரசை நாடி அதன்மூலம் செயல்படுத்த வைக்கலாம் என்பதாகும் என்றார்.

ஆனால், அதற்கு தமிழகத்தின் வழக்கறிஞர் சேகர் நாப்தே, ராக்கேஷ் திரிவேதி, ஜி.உமாபதி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 2-ம் கட்ட அதிகார அமைப்பு ஒன்று இருக்கத் தேவையில்லை. காவிரி ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றனர்.

காவிரி மேலாண்மை அமைப்பு என்ற பெயருக்கு பதிலாக வாரியம் என்ற பெயரை மாற்ற தமிழகம் விடுத்த கோரிக்கையை கர்நாடகமும், மத்திய அரசும் ஏற்றுக்கொண்டன.

அதன்பின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காவிரி இறுதித்தீர்ப்பை மத்திய அரசு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறுதித் தீர்ப்பின்படி காவிரி நிதிநீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புக்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது, இறுதிமுடிவும் காவிரி வாரியமே எடுக்க முடியும் மத்திய அரசுக்கு கிடையாது.

காவிரிநீர் பிடிப்புப் பகுதிகளில் கர்நாடமும், தமிழகமும், காவிரி மேலாண்மை அமைப்பின் அனுமதியின்றி எந்தவிதமான தடுப்பணைகளையும், அணைகளும் கட்ட இயலாது. இதுதொடர்பாக மாநில அரசுகள் மத்திய அரசை அணுகத் தேவையில்லை. காவிரி மேலாண்மை அமைப்பின் முடிவே இறுதியானது. அணைகளில் இருந்து நீர் திறக்கும் அதிகாரம் அனைத்தும் காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்பிடமே இருக்கும்.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் இல்லாமல், டெல்லியில் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நீதிமன்றமும் ஏற்கிறது. அந்த அலுவலகத்தின் அன்றாக அலுவலகப் பணிகள், அறிக்கைகள் அளிக்கும் நிர்வாகரீதியான அலுவலகம் பெங்களூருவில் செயல்படலாம்.

அதேபோல, தமிழகத்தின் கோரிக்கையின்படி, காவிரி மேலாண்மை அமைப்பு என்பதற்கு பதிலாக காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயரோடு அழைக்கலாம்.

அதேசமயம், தமிழகத்தின் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இந்த திருத்தங்களை மத்திய அரசு செய்து நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x