Published : 16 May 2018 10:43 AM
Last Updated : 16 May 2018 10:43 AM

காங்கிரஸ் செய்த லிங்காயத் ‘தந்திரம்’ திருப்பித் தாக்கிய கதை

கர்நாடகாவின் ஒரு வளமிக்க, அதிகாரமிக்க சமூகப்பிரிவினரான லிங்காயத்துகளுக்கு மதச் சிறுபான்மையினர் அந்தஸ்து அளிக்கும் காங்கிரஸின் முயற்சி தேர்தலில் கைகொடுக்கவில்லை என்பதோடு காங்கிரஸ் முகத்தில் அந்தத் தந்திரமே திருப்பி அடித்ததுதான் நடந்தது.

லிங்காயத்துகள் மரபாக பாஜக வாக்குவங்கியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மதச்சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கி அவர்களைக் கைக்குள் போடும் காங்கிரஸின் பின்வாசல் முயற்சி முன் வாசல் வழியாகவே காங்கிரஸைத் தாக்கியுள்ளது.

லிங்காயத்துகள் அதிகம் வாழும் பாம்பே கர்நாடகா மற்றும் மத்திய கர்நாடகாவில் பாஜக வெற்றிகளைக் குவித்ததே இதற்குச் சான்று. பாம்பே கர்நாடகாவில் 50 தொகுதிகளில் பாஜக 30 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் இங்கு 2013-ல் 31 தொகுதிகளில் வென்றது தற்போது 17 ஆகக் குறைந்தது.

மத்திய கர்நாடகாவில் 3 தொகுதிகளை மட்டுமே வென்று தொங்கிக் கொண்டிருந்த பாஜக இம்முறை 15 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 19 தொகுதிகளிருந்து 6 தொகுதிகளை இழந்து 13 ஆகக்குறைந்தது. ஹைதராபாத் கர்நாடகாவிலும் கூட பாஜக 10லிருந்து 15 ஆக அதிகரித்துக் கொண்டது.

தேர்தல் சமயத்தில் லிங்காயத்துகள் சமாச்சாரம்தான் வாக்காளர்கள் மத்தியில் பேச்சாக இருந்து வந்தது. குறிப்பாக லிங்கயத்துகளின் இருதயமான வடக்கு கர்நாடகாவில் பிரச்சினைகள் எழுந்தது, காரணம், காங்கிரஸ் கர்நாடக அமைச்சரவை லிங்காயத்துகள் கேட்ட லிங்காயத்-வீரசைவ மதக் கோரிக்கையை ஏற்காமல் சிறுபான்மை மதமாக பரிந்துரை செய்ய முடிவெடுத்தது. இதனையடுத்து லிங்காயத்-வீரசைவர்களுக்கும் காங்கிரசாருக்கு இடையே ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டனர்.

இதனையடுத்து சுமார் 5% வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் தப்புக் கணக்குப் போட்டது, அப்படி நடக்கவில்லை. ஏன் தப்புக் கணக்கு ஆனது என்பது சித்தராமையா அமைச்சரவையிலிருந்த லிங்காயத் பிரிவைச் சேர்ந்த வினய் குமார் குல்கர்னி, பசவராஜ் ராயரட்டி, ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் படுமோசமான தோல்விகளைச் சந்தித்ததிலிருந்து தெரியவந்தது. எம்.பி.பாட்டீல் மட்டும் வென்றார், ஆனாலும் வீர சைவர்கள் இவருக்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டனர், எப்படியோ தப்பி வெற்றி பெற்றார் பாட்டீல்.

ஆனாலும் லிங்காயத் தனி மதம் என்ற அடையாளத்தை ஏற்படுத்த முயற்சி செய்தவர்கள் மட்டும் தோல்வியடைந்தனர் என்று கூற முடியாது. வீர சைவர்கள் சார்பாக நின்றவர்களுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் போனது. எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் என்ற அமைச்சர் மற்றும் அனைத்திந்திய வீர சைவ மகாசபைத் தலைவரின் மகன் சிவசங்கரப்பா ஆகியோரும் தோற்றனர். மஹாசபையின் பொதுச் செயலர் மற்றும் அமைச்சருமான ஈஸ்வர் காந்த்ரே, இவர் வீர சைவர்கள் பக்கம் நின்றார், லிங்காயத் விவகாரம் தொடர்பாக தன் அமைச்சரவைச் சகாக்களுடனேயே உடன்படாமல் இருந்தார், ஆனால் இவர் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் உட்கட்சி வட்டாரங்கள் லிங்காயத்-வீர சைவர்களை பிரித்தாளும் தந்திரம்தான் திருப்பி அடித்தது என்பதை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வீர சைவர்கள் சேர்ந்து மேற்கொண்ட பிரச்சார வாக்கியமான ‘இந்து சமுதாயத்தை உடைக்கிறது காங்கிரஸ்’ என்பது சூடுபிடித்து உத்வேகம் பெற்றது என்பதை மறுப்பதற்கில்லை, இது காங்கிரஸ் தோல்விக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்தது என்பதை மறுக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x