Published : 16 May 2018 07:26 AM
Last Updated : 16 May 2018 07:26 AM

பஞ்சாபில் முதியவர் உயிரிழந்த வழக்கில் சித்துவின் சிறை தண்டனை ரத்து: ரூ.1,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சாலையில் ஏற்பட்ட தகராறில் ஒரு முதியவர் உயிரிழந்த வழக்கில் பஞ்சாப் சுற்றுலா அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில், கடந்த 1988-ம் ஆண்டு சித்துவும் அவரது உதவியாளர் ரூபிந்தர் சிங் சாந்துவும் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த ஜிப்சி காரில் அமர்ந்திருந்தனர். அப்போது அவ்வழியாக மாருதி காரில் வந்த குர்னம் சிங் (65), காரை ஓரமாக நிறுத்துமாறு சித்துவிடம் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், குர்னம் சிங்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குர்னம் சிங் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குர்னம் சிங் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி இருவரையும் 1999-ல் விடுவித்தது. இதை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2006-ல் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் 304 (II)-வது (மரணம் விளைவிக்கக்கூடிய ஆனால் கொலைக்குற்றம் அல்லாத) பிரிவின் கீழ் இருவரும் குற்றவாளி என அறிவித்ததுடன், தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சித்து, சாந்து ஆகிய இருவரும் 2007-ல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.

இந்நிலையில், சித்து மற்றும் சாந்துவின் மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

“சித்து, சாந்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இந்திய தண்டனை சட்டத்தின் 323-வது (வேண்டுமென்றே தாக்கியது) பிரிவின் கீழ் சித்து குற்றவாளி என அறிவிக்கப்படுகிறது. எனினும் சிறை தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த குற்றத்துக்காக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோல சாந்து மீதான குற்றச்சாட்டு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது” என தீர்ப்பில் கூறி உள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x